சிறுகதை: பேராண்டி….!

ஶ்ரீராம் விக்னேஷ்–  கவிஞர் தமிழ்க்கனல், கவிஞர்  இளசை அருணா ஆகியோரைத்  தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு,  நவம்பர்  –  2004 ல்,  எட்டயபுரம் – பாரதியார்  மணிமண்டபத்தில்  வைத்து  வெளியிடப்பட்ட,  “கரிசல் காட்டுக் கதைகள்” சிறுகதைத்  தொகுப்பில் வெளிவந்த   சிறுகதை  இது.) –


பெளர்ணமி  நிலவின்  ஆக்கிரமிப்பு  மீண்டும் ஒரு  பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின்  மெல்லிய வருடலினால், உடம்பை  இலேசாக  நெளித்துக்கொண்டேன்.

என்னைத்  தோளில்  சுமந்தபடி  நடந்துகொண்டிருந்த  தாத்தாவின்  கம்பீரம்  என்னை  உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.

தெற்கே  இரண்டு  மைலுக்கப்பால்,  ரயில்  பாதையில்  புகையைக்  கக்கிக்கொண்டு  குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின்  ஒலி  தெளிவாகக்  கேட்டது.

“பேராண்டி…. மணி  ரண்டு  ஆயிடுச்சுல…. சினிமா  முடிஞ்ச  உடனே கிளம்பியிருக்கணும்….  ரொட்டிக்கடைக்குப்  போனதால  லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா  கெட்டியா  உக்காந்துக்க…. தூங்கிக்  கீங்கி  விழுந்துடாதல…. இன்னும்  சத்துநேரத்தில  வீடு வந்திடும்…. சரியா…..”

“ நான்  ஒண்ணும்  தூங்கல்ல  தாத்தா….” பதில்  கூறினேன்  நான்.

இலேசாகத்  திமிறினார்  தாத்தா. அவர் பேச்சிலே  சிறிது  கோபம்  அடுத்து  வெளிவந்தது.

“என்னலே…. தாத்தா, பூத்தாண்ணுகிட்டு…. பேராண்டியிண்ணு  கூப்பிடச் சொல்லிக்கிட்டு  வர்றேன்…. நீ என்னமோ  ஓம்புட்டு  இஷ்டத்துக்கு  இழுத்து  உட்டுக்கிட்டே  போறே…. சொல்லுலே….”

“சரிலே…. பேராண்டீ………………..”  சத்தமாகச்  சொன்னேன்  நான்.

“கெக்கெக்கே….” என்று  தனது  பொக்கை  வாயால்  சிரித்துக்கொண்டார்  தாத்தா. தன்னோடு  சரிக்குச் சரியாக  நான்  பேசுவதில்  அவர்  கண்ட  இன்பம்  என்னவோ!

“பேராண்டி…. எனக்கொரு  சந்தேகம்….”  மெதுவாகக்  கேட்டேன்.

தாத்தா  உற்சாகமானார்.

“கேளுல…. கேளு…. என்னா  சந்தேகம்…. எப்ப  உனக்கு  கல்யாணம்  பண்ணி வைக்கப்  போறேன்னு  கேக்கப்போறியா…. இருலே…. தாத்தா மொதல்ல  ஒண்ணு  கட்டிக்கிட்டு,  அப்புறமா  உனக்கு  ஒண்ணு  கட்டி  வெக்கிறேன்….”

சொல்லிவிட்டு  மீண்டும்  “கெக்கெக்கே….” சிரிப்பு  தாத்தாவுக்கு.

மீண்டும்  நெளிந்தேன்  நான்.  பதிலடி  கொடுக்க  நினைத்தேன்.

“எதுக்கு  பேராண்டி  ஆளுக்கு  ஒண்ணு…. பேசாம  நாம  ரண்டுபேருமா  ஒரு  பொண்ணையே  கட்டிக்குவோம்….”

தாத்தாவுக்கு  பெரிய  குஷி.  அவர்  சிரித்த சிரிப்பின் குலுக்கலால்  என்  அடிவயிறு  கலங்கியது.

எனக்கு  சிறிது  கோபம்.  பேசாமல்  இருந்தேன்  நான்.  தாத்தா  என்னை  உலுக்கினார்.

“பேராண்டி…. என்னலே  உம்முண்ணு  இருக்கே…. நீ  கேக்கவந்த  விசயத்தை  மறந்திட்டியா…. சரிசரி….  இப்ப  கேளு….”

“இப்ப  உம்பேரு  என்ன  உண்டோ…. அதே  பேருதான்  எனக்கும் வச்சிருக்கு…. இல்லியா…. அது  ஏன்….?”

Continue Reading →