ஒரு பொம்மையின் வீடு

ஒரு பொம்மையின் வீடு- ஸ்ரீரஞ்சனி -ஆண், பெண் சராசரி மாதிரிகளையும், திருமண உறவில் ஒரு பெண்ணின் பங்கினையும் விமர்சனத்துக்குள்ளாக்கும் A doll’s house என்ற Henrik Ibsenஇன் நாடகம் அந்த நேரத்தில் ஐரோப்பாவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருந்ததாக அறிகின்றோம். அந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகள் இன்றும் எங்களுக்குப் பொருத்தமானவையாகவே உள்ளன, துரதிஷ்டவசமாக சமூகம் இன்னும்தான் மாறவில்லை.

இந்த நாடகத்தின் தமிழ் வடிவம் ‘ஒரு பொம்மையின் வீடு’ என்ற பெயரில் ‘மனவெளி’யின் கடந்த அரங்காடலின்போது அரங்கேறியிருந்தது. மே மாதம் 4ம் திகதி மீண்டும் அதனைத் திரையில் பார்க்குமொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது.  இந்த நாடகத்தின் ஒத்திகை ஒன்றைக் கடந்த மே மாதத்தில் பார்த்தபோது – அரசியின் அற்புதமான வெளிப்பாட்டை, இந்த நாடகம் சொல்லும் முக்கியமான கருத்துக்களை, சொற்களை மனதில் சிறைபிடிக்கச் சொல்லும் பி. விக்னேஸ்வரனின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பை அனைவரும் பார்க்கவேண்டுமென நான் ஒரு பதிவிட்டிருந்தேன். பின்னர் நாடகம் பற்றிய விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டுமென விரும்பினேன். ஆனால், அதற்கு நேரம் ஒத்துழைக்கவில்லை. இதனைத் திரையில் பார்த்த அனுபவம் பற்றி எழுதும்படி மனவெளி செல்வன் கேட்டபோது நேரம் சவாலாக இருக்கின்றது என மீண்டும் தவிர்க்க முடியவில்லை. சிறந்ததொரு கலைப்படைப்பினை வழங்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமை என்பதற்கேற்ப அதுபற்றிய எனது சில மனப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கான பொருள்களுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு வரும் நோறாவின் வருகையுடன் இந்த நாடகம் ஆரம்பமாகிறது. அப்படியொரு அலங்காரப் பொருளாகத்தான் நோறா வாழ்கின்றாள் என்பதற்கான படிமம் இது எனலாம். வந்ததும் வராததுமாக மக்றோன்களை வாயில் போட்டுவிட்டு அவற்றைச் சாப்பிடுவது கணவர் ஹெல்மருக்குப் பிடிக்காது என அவற்றை ஒளித்துவைக்கும் நோரா குழந்தைத்தனமான, கணவனுக்குப் பயந்த அல்லது கணவனைத் திருட்டுத்தனமாகவேனும் மேவ விரும்பும் ஒரு பெண்ணாக எங்களுக்கு அறிமுகமாகிறார்.

என்ரை சின்ன அணில் குஞ்சு என ஹெல்மர் அழைக்கும்போது அதில் பரவசப்படுவபவராக, அவரிடம் செலவுக்கு கையேந்தும் அப்பாவியாக, ஹெல்மருக்குப் பிடிக்காது என அடிக்கடி சொல்லிசொல்லி அவர் விரும்பாதவற்றைத் தவிர்க்கும் ஒரு கீழ்ப்படிவுள்ள, அன்பான மனைவியாக வெளிப்பார்வைக்குத் தோன்றும் நோறா, ஒளிப்பு மறைப்புள்ளவளாகவராகவும், தனக்குப் பிடித்தவற்றைப் பெறுவதற்காக சரசமாடக்கூடியவராகவும், தன்னைப் பற்றிப் பீற்றிக்கொள்ளும் சுயநலமிக்கவராகவும்கூட இருக்கிறார். முடிவில் கணவனின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுயிரை மாய்க்கக்கூடத் துணியும் நோறா, குடும்ப நலனுக்காக அவர் செய்த தவறிலிருந்து அவரைப் பாதுகாப்பாரென கணவன்மீது அவர் கொண்டிருந்த எதிர்பார்ப்புப் பொய்த்தவுடன் கிளர்ந்தெழும் ஒரு புரட்சிகரப் பெண்ணாக மாறிவிடுகிறார். இத்தனை வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட அந்த நோறா பாத்திரத்தை அரசி விக்னேஸ்வரனைத் தவிர வேறு எவரால் செய்யமுடியும் என நினைக்குமளவுக்கு மிகச் சிறப்பாக அதை வெளிக்கொணர்ந்திருந்தார் அரசி.

Continue Reading →