தொண்டைமண்டலப் பகுதிகளில் ஒரு பகுதியாக விளங்கிக்கொண்டிருக்கிற விழுப்புரம் மாவட்டம் கூவாகம் எனும் சிற்றூரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி அன்று நடைபெறும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மையாகும். அங்கு நடைபெறுகின்ற திருவிழா என்பது தமிழகத்தின் பிறபகுதிகளில் கூத்தாண்டவர் கோவில்கள் இருந்தாலும் கூவாகத்தில் நடைபெறுகின்ற திருவிழாவைப் போன்று அக் கோவில்களில் சிறப்பாக நடைபெறுவதில்லை. அத் துணைச்சிறப்பு அக்கோவிலுக்கும் அக்கோவில் திருவிழாவிற்கும் அங்கு வருகின்ற மக்களுக்கும் உண்டு என்பதை நன்கு அறிய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தொண்டைமண்டலப் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றான கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு குறித்துக் காணலாம்.
தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகள்
தமிழ் இலக்கியங்களில் மனிதசமூகத்தைப் பற்றி மிக விரிவாகப் பற்பல கருத்தியல் கோட்பாடுகளில் பேசப்பட்டுள்ளன. அவைகள் எந்தெந்த வகைகளில் பேசப்பட்டாலும் மானுடம் உயிர்பெற்று தெளிந்த ஞானத்தோடும் தெளிந்த அறிவோடும் புகழ்பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் எனும் நோக்கத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களாகும். இலக்கியங்களில் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரையில் இயல்பாகவே இடம்பெற்று இருக்கும் வகையில் அதன் சூழல்கள், காலநிலைகள், இடங்கள் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையில் மானுடச்சமூகத்தின் ஆண்பால், பெண்பால் உணர்வுகளை மிகுதியாக எடுத்துக்கூறி வந்தபோதிலும் ஆண்பாலாக இருந்து பெண்பாலாக மாற்றமடைந்த திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றியும் சில இடங்களில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவ்விலக்கியங்களில் திருநங்கைகளின் பின்னணியைப் பற்றிய தெளிவான பதிவுகள் காணப்படுகின்றன. அவை தொல்காப்பியம், சங்க இலக்கிய நூலாகிய அகநானூறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார், நீதிநெறி விளக்கம், முதுமொழிக்காஞ்சி, சூடாமணி, உரிச்சொல் நிகண்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, நீலகேசி, பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், குமரேச சதகம், விவேக சிந்தாமணி, கம்ப இராமாயணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. புதுக்கவிதை நூல்களாகிய கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், நா. காமராசன் கவிதைகள் போன்றோரின் கவிதைகளிலும் இன்னும் பிற புதுக்கவிதை நூலாசிரியர்களின் கவிதைகளிலும் திருநங்கைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதனைப் பின்வரும் இலக்கியச்சான்றுகள் வழி காணலாம்:
தொல்காப்பியர் உயர்திணையில் பெண்மைப் பண்பைக் குறிக்கும் ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும் தெய்வம் கடவுளர்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லும் இவை என்று தம்பொருள் உணர்த்தும் முடிவுபெறாது; உயர்திணையில் அதற்கான பால் பாகுபாடு மாறுபட்டு வழங்கும் தன்மை உடையதாம். ஆண்பால், பெண்பால் என இரு பாலினங்களை அடையாளம் கண்டாலும் மூன்றாவது பாலினமான ஆணும் அல்லாது பெண்ணும் அல்லாது உள்ள மனிதர்களை மாற்றத்திற்குரிய பெயராகக் (திருநங்கையராக) கருதவேண்டும் என்பதை,