– – இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். . –
வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர் சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக் கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.
வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல்கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.
வேந்தனாரின் இலக்கிய நோக்கினை அவரது பின்வரும் கவிதை வரிகளினூடு பார்க்கலாம்,
“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”
என்று அவர் பாடினார். வித்துவானான அவரே ‘பாட்டென்றால் பண்டிதர்க்கு மட்டும் உரிமையல்ல’ என்று சாடினார். கூடவே ‘வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்’ என்று எடுத்துரைத்தார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர். ‘மக்களினம் மாட்சி கொள்ள மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல் கூடுகின்ற கொள்கை’ இதுவே அவரது பிரதானமான இலக்கிய நோக்காக நான் கருதுகின்றேன்.
மேலும் மேற்படி ‘கவிஞன்’ என்னும் கவிதையில் அவர் பின்வருமாறும் பாடுவார்:
“பஞ்சனையில் வீற்றிருந்தே பனுவல் பார்த்துப்
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்தே போகும்..”
“வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கை யின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்பு வோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதி னாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்”
அதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும் என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள் பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள். பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம். இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில் அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும். தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில் பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா? இதுபோல்தான் இன்றைய பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.