தமிழ்மொழி உலகின் முதல் மொழி, மூத்தமொழி, மூவா வனப்புடைய மொழி. “இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”1 என்று பாரதியும் தமிழின் பழமையை வெளிக்காட்டி நிற்கின்றார். உலகின் ஒப்பற்ற செம்மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழி இயல், இசை, நாடகமென மூன்று பிரிவுகளையுடையதாய் இலங்குகிறது.
முத்தமிழில் மூன்றாந்தமிழான நாடகத்தமிழ், கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியதாக விளங்குவது திண்ணம்.படித்தறியா பாமரா்களும் விரும்பி ரசிக்கும் இக்கலை பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. நாடு +அகம்= நாடகம். அகத்தை நாடி வரும் கலை நாடகம். உயிர்ப்பான இக்கலையை இயலும் இசையும் கூடி, எண்வகை மெய்ப்பாடுகளும் சுவையுந் தோன்ற மேடையில் தோன்றி பாடி ஆடி நடித்து வெளிப்படுத்துவா். இத்தகு சிறப்புடைய நாடகமானது மேடை நாடகம், செய்யுள் நாடகம் என இருவகைகளில் இயற்றப்படுகிறது. பேராசிரியா் மலையமான் இயற்றியுள்ள நீா்மாங்கனி, செய்யுள் நாடக வகையைச் சார்ந்தது. இந்நாடகக் கட்டமைப்புத்திறனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பேராசிரியா் முனைவா் மலையமான்:
மலையமான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15.07.1932 இல் நாராயணணன் –பாலகுசாம்பாள் இணையரின் மகனாகப் பிறந்தவா். இயற்பெயா் இராசகோபாலன். போளுரில் தொடக்கக் கல்வி கற்றவா். புலவா், முதுகலை முதல் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் முனைவா் பட்டம்வரை பெற்றுள்ளவா். பதிவுத்துறையில் எழுத்தா், வரைவாளா், பள்ளி ஆசிரியா், பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியா், நூலகா், பதிப்பாசிரியா் என பல்வேறு துறைகளில் தனது அயராத உழைப்பையும் சேவைகளையும் புரிந்துள்ளார். தான் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் எழுத்துறையில் தொடா்ந்து தன் பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.
“சில ஆய்வாளா்கள் கவிதைகளின் சுவை இன்பத்திலே திளைத்து அவற்றை மாந்தி குடிப்பதும் மாந்தா்களுக்கு கொடுப்பதும் வழக்கமாகக் கொள்வா். மலையமானோ மூலத்தையே கண்டறிந்து தமிழ் ஞாலத்திற்குக் கொடுக்கிறார்”2 என்கிறார் இலக்கிய செல்வா் முனைவா் குமரி அனந்தன்.
மலையமான் கவிதைகள்(கவிதை), தமிழ் ஆட்சி மொழி சிக்கல்கள் (ஆராய்ச்சி), நோபில் பரிசு பெற்ற கவிஞா்கள்(வாழ்க்கை வரலாறு), திருக்குறள் துளிகள்(கட்டுரை) ஆகியவை பெரியவா்களுக்கான இலக்கிய கொடையாக அளித்துள்ளார். சிறுவா் இலக்கியத்துறையில் மிக்க ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு பனித்துளிக் கதைகள், பண்புநெறிக் கதைகள், மூன்று அரும்புகள் முதலிய கதை இலக்கிய நூல்களையும் அறிவியல் சிறுகதைகள் உள்ளிட்ட அறிவியல் கதைகள் அறிவியல் வெளிச்சங்கள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரை நூல்களையும் பல்வேறு தொகுதிகளாக எழுதி குவித்துள்ளார்.
நாடகத் துறை:
நாடகத்துறையில் மிக்க ஆா்வமும் ஈடுபாடும் கொண்டு நோயே டாக்டரானால், உதவித் திருமணம், புதுமைப்பரிசு( வரலாற்று கவிதை நாடகம்), இருதலைப் பறவை, திருஞானசம்பந்தர் வரலாற்று நாடகம், இரண்டாம் கண்ணகி (சமுதாய நாடகம்) ஆகியவற்றை இயற்றி தமிழ்க்கொடை செய்துள்ளார். இவரது நாடகங்கள் சென்னை வானொலியில் தொடா்ந்து 20 வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளமை, இவரது நாடகத்திறனுக்கான சான்று. இராணிமேரிக் கல்லூரி மாணவியா் இவரது நாடகங்களை அரங்கேற்றி சிறப்படைந்தனா்.