உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. எல்லா நாடுகளிலும் வீரர்களுக்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நாட்டில் வீரர்களுக்குத் தனிச்சிறப்பு இருந்ததைச் சங்ககாலப் புற இலக்கிய நூல்கள் மூலம் அறியமுடிகிறது. பழந்தமிழர் போர்புரிவதற்கென்று தனியொரு இலக்கணம் கண்டனர். தமிழ்மொழியில் போரைப் பற்றிய தமிழ் இலக்கியங்கள் பல இருக்கின்றன. அவர்கள் அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந்தனர். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூல்கள் புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழர்களின் வீரத்தைப் பற்றியும் வீரத்தைப்போற்றுவது பற்றியும் தெளிவாக எடுத் துரைக்கின்றன. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் திறலோடு போர்செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து பாராட்டினார்கள்; திறலோடு போர்செய்து களத்தில் வீழ்ந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தனர். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. பண்டைக்காலத்தில் போர்க்களத்தில் பெருவீரங்காட்டிப் போர்புரிந்து வீரமரணம் அடைந்த வீரனுக்கு அவன் வீழ்ந்த இடத்தில் நடுகல்நட்டு வழிபடும் வழக்கம் இருந்தது. இதனைச் சங்ககால மக்கள் வீரக்கல் அல்லது நினைவுக்கல் என வழங்கினர். வெட்சிப்போர், கரந்தைப்போர், உழிஞைபோர், நொச்சிப்போர், தும்பைப்போர், வாகைப்போர் என்று போர் முறைகளைத் தமிழர் ஏழு வகைகளாகப் பிரித்திருந்தார்கள்; ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர்செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள்; சிறப்புச் செய்தார்கள். தமிழகத்தில் வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான நடுகற்கள் தமிழ்நாட்டிலே பல இடங்களில் காணக்கிடக்கின்றன. வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறள் இவ்வாறாக எடுத்துரைக்கிறது.
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.(குறள்.771).
இலக்கியத்தில் நடுகல்: வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால் நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கால்கோல் என்பது தேர்ந்தெடுத்த கல்லைக் கொண்டு வருவது. நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுதல் என்பது அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு அதற்கு மயிற்பீலிகளையும் மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறனையும் புகழையும் வாழ்த்திப்பாடுவது. கல்நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பான விரர்களும் வந்து சிறப்புச் செய்வார்கள். தொல்காப்பியம் முதலாகப் பிற்கால இலக்கண நூலான நேமிநாதம் முடியவும் உள்ள இலக்கண நூல்களில் நடுகல் எடுத்தலுக்குரிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று நடுகல்லுக்குத் துறைகளை அளிக்கிறார். அவற்றுள் பெரும்படையும் வாழ்த்துதலும் நடுகல் வழிபாட்டைக் காட்டுவன. வீரரின் பெயரும் பீடும் எழுதப்பட்டு, விளங்கிய நடுகற்கள் வழிபடப்பட்டு வந்தமையைச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு; எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. பண்டைத்தமிழர்கள் நடுகல்லைத் தெய்வமாக வழிபட்டனர். போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி அதை நடவேண்டிய இடத்தில் நட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்புச் செய்து வாழ்த்துவார்கள். நடுகற்கோவில்களைப் போன்று அரசனைப் புதைத்த இடத்தில் சமாதிக் கோயில்கள் உருவாயின. இக்கோவில்கள் பள்ளிப்படைக் கோவில்கள் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகின்றன. வடக்கிருந்து (பட்டினி கிடந்து) உயிர் விட்டவருக்கும் கண்ணகி போன்ற வீரபத்தினிக்கும் நடுகல் நட்டுச் சிறப்புச் செய்வதும் உண்டு. கணவனோடு தீயில் விழுந்து உடன்கட்டை ஏறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும் (வேங்கடசாமி,2001:256).