அப்பா நினைவாக……

அப்பா நடராஜா நவரத்தினம்அப்பாவும் மகனும்வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா(நடராஜா நவரத்தினம் – நில அளவையாளரான அவரைப் பலர் ‘Tall Nava’ என்று அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக ‘ஷெல்ஃப்’ ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணனின் நாவல்களும் ஓரிரண்டிருந்தன. டி.இ.லாரண்ஸின் ‘லாரண்ஸ் ஒஃப் அராபியா’ (Lawrence of Arabia) . இவற்றுடனிருந்த இன்னுமொரு நூல் டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். அப்பா என்றதும் கூடவே நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் அப்பாவுடன் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள். என் சிறு வயதில் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் என்னைத் தன்னுடன் ஆங்கிலத்திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றார். ‘சீன் கானரி’ ஜேம்ஸ் பாண்டாக நடித்த ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ , ‘பரபாஸ்’, ‘பெனஹர்’ அடுத்தது ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’.  இவற்றில் முதலாவதைத்தவிர ஏனையவை பைளிள் கதைகளை ஆதாரமாகக்கொண்டவை. இத்திரைப்படங்கள் அவருக்குப் பிடித்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று அவற்றில் நடித்திருந்த நடிகர்கள். இவர்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ‘ஹாலிவூட்’ நடிகர்கள். பாண்ட் திரைப்படத்தில் சீன் கானரி. பரபாஸில் அந்தனி குயின். பென்ஹர், டென் கமாண்ட்மென்ட்ஸில் சார்ள்டன் ஹெஸ்டன். இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள். இதன் மூலம் என் பால்யகாலப்பருவத்திலேயே இந்நடிகர்கள் எனக்கும் அறிமுகமானார்கள். பின்னர் என் பதின்ம வயதுகளில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் பலவற்றைத் தேடித்தேடிப்பார்ப்பதற்கு அப்பாவுடன் சென்று பார்த்த இத்திரைப்படங்களே காரணம்.

அக்காலகட்டத்தில் அவருக்குப்பிடித்த நடிகர் சிவாஜி. எனக்கோ எம்ஜிஆர். பாலச்சந்தரின் திரைப்படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். அவை பற்றியும் அவர் அம்மாவுடன் உரையாடுவார். குறிப்பாக எதிர் நீச்சல், பாமா விஜயம் ஆகியவை பற்றிய அவரது அம்மாவுடனான உரையாடல்கள் நினைவிலுள்ளன. எதிர் நீச்சல் படத்தில் வரும் நாயர் (முத்துராமன்) மற்றும் மாது (நாகேஷ்) பாத்திரங்களை அவர் பெரிதும் இரசித்தார்.

Continue Reading →

வேந்தனார் நூற்றாண்டுவிழா – பாரிஸ் 23 06.2019

அன்பிற்குரியவர்களே! எனதருமைத் தந்தையார் வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழா, பாரிஸ் மாநகரில் , வரும் 23.06.2019 , ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இவ் விழாவினை ” வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் – பிரான்ஸ்” அமைப்பினர் பொறுப்பெடுத்து நடத்துகின்றார்கள். இதற்கான அழைப்பிதழை இங்கு இணைத்துள்ளேன்.

Continue Reading →

தந்தையர் தினத்தை பேணுவோம் வாழ்த்தினைப் பெறுவோம்! அவர் வாழ்த்தை வேண்டுகிறேன் !

விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !

தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !

பொட்டுவைத்த  என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை  வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன்  தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட   ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !

நானுண்ட   மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி  நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க  உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !

Continue Reading →

“தந்தை என்னும் தெய்வம்” (தந்தையர் தினக் கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்

பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச்  சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! –  அந்த,  
நல்லவர் பேருலகில்……..    தந்தை….!

ஓர்பது  மாதந்  தன்னில் : ஒருத்திதன்  வயிற்றிற்  கொளினும்,
யார் அதன்   வேரை இட்டார்…….  முதலில் ?  –  அவர், 
பேர் அது   தந்தையாகும்……   உலகில்….!

வானது  பெய்தால் தானே : வையகம்  பசுமை  காணும்,
வானைப்போல்  வழங்கிடுவார்……  வாரி !   –  அந்த, 
வான்புகழ்  கொண்ட தந்தை …….     பாரி…!

அன்பெனும்   அமளி  மேலே  :  அன்னைதான்  துயிலச்  செயினும்,
நன்புகழ் அறிவை   ஏற்றும்…….  ஜோதி !  –  அது,
நானிலம்  புகழும்    தந்தை…….      ஜாதி…!

எதை எதோ   நினைத்து  நெஞ்சம் : ஏங்கிய  போதும்  மழலை,    
உதையினைக்  கண்டபோது…… மலரும் !  –  அந்த,  
உத்தமர்  தந்தை என்பார் …….     பலரும் !

Continue Reading →