உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை

வரலாறுதுரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள்.  இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பதும் அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட கடுமையான தண்டனை தரப்பட்டது. இராஜதுரோகி ஆக அறிவிக்கப்பட்ட ஒருவர், அவர் சார்ந்தவர் நிலமும், வீடும், உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு அப்பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலும் இராஜ துரோகிகள் கூடா நட்பு, பதவி செல்வத்திற்கு ஆசைப்பட்டும் அவ்வாறு நடந்து கொண்டனர். குறிப்பாக, அதிகமாக வேளான் என்ற அரசகுடியாரும், பிராமணரும் இந்த தண்டனைக்கு ஆட்பட்டது தெரிகின்றது. நான்கு அகவை முதல் இலவச உண்டு உறைவிடமான வேதபாட சாலையில் கல்வி, சரஸ்வதி பண்டாரம் என்ற நூல் நிலையம், கோவிலில் வேலை அதற்கு நிவந்தமாக விளை நிலம், குடியிருக்க இலவச வீடு, கோயிலில் ஆதுர சாலைகள் இப்படி உயிர்த்துள்ள நாள் வரையில் வேறு எவருக்கும் கிட்டாத பல வசதிகளை மன்னரிடம் இருந்து மானியமாகப் பெற்ற போதும் சில பிராமணர்கள் குறுகிய நோக்கில் அரச அதிகாரிப் பதவிகளைப் பெறுவதற்காக இப்படி நரித்தனமாக நடந்துகொண்டது வரலாற்றில் பதிவாகி உள்ளது. அதைப் பதிந்தவரும் பிராமணரே. கீழே இதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.

உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 2 ஆம் ஆண்டு கல்வெட்டு.

“ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார், பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கோட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத் தந்தோம். தாங்களும், இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக. இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவர இ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன். இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன். இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன”

Continue Reading →

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையின் சாயலில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப்பாடலா திருமுருகாற்றுப்படை?

முனைவர் ஆ. சந்திரன் , உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் -நெறிபடுத்துதல் அல்லது வழிபடுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டது ஆற்றுப்படை. வறுமையிலிருந்து மீண்டு வளம்பெற்ற ஒர் இரவலன் வறுமையுடன் இருக்கும் மற்றோர் இரவலனை தான் வளம்பெற்று வாழக்காரணமான வள்ளல் அல்லது மன்னனிடம் சென்று பெருஞ்செல்வம் பெற்று வளமுடன் வாழுமாறு நெறிபடுத்துவதாய் இது அமையும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”
(தொ.பொ.91:3-6)

எனத் தொல்காப்பியர் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகிய நால்வா் மட்டுமே ஆற்றுப்படுத்த உரியவா்கள் என்று கூறுகிறது. அப்படி இருக்க அடியவரை இறையருள் வேண்டி ஆண்டவனிடத்தே (முருகன்) ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை  ஆற்றுப்படை என்ற பெயருடன் பத்துப்பாட்டு தொகுப்பில் எப்படி இடம்பெற்றது. இப்பாடல்  கடவுள் வாழ்த்துப் பாடலாக அத்தொகுப்பில் இடம்பெற்ற பாடலா? அல்லது பாடலில் இடம்பெற்ற சில கூறுகள் சிறுபாணாற்றுப்படையை ஒத்திருப்பதால் அப்பாடலின் சாயலில் பாடப்பட்ட பாடலா என்பன போன்ற வினாக்களுக்கான விளக்கங்களைத் தேட முயல்கின்றது இக்கட்டுரை.

திருமுருகாற்றுப்படையும் ஆற்றுப்படை இலக்கணமும்
திருமுருகாற்றுப்படையைத் தொல்காப்பியர் கூறியுள்ள ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்புடைய பாடலாகக் கொள்ள முடியுமா? என்ற வினா? நெடுங்கலாமாகவே இருந்து வருகின்றது. பத்துப்பாட்டிற்கு உரையெழுதிய நச்சினா்க்கினியா், கூத்தரும் பாணரும்… என்ற தொல்காப்பிய நூற்பாவில் இடம்பெற்றுள்ள “பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கொள்க”1 எனப் பொருள் விரித்து முருகாற்றுப்படையும் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், “முருகாற்றுப்படை என்பதற்கு வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்ததென்று பொருள் கூறுக”2 எனவும் விளக்கம் அளித்துள்ளார். இவரைப் போன்றே “கவிப்பெருமாள் (பரிபெருமாள்), பெயர் புலப்படாத உரையாசிரியர், பரிமேலழகர், பரிதியார்”3 ஆகியோரும் பொருள் கொண்டுள்ளனர். உரையாசிரியர்களின் இந்த விளக்கங்கள் தொல்காப்பியத்தில் ஆற்றுப்படைக்குக் கூறப்படும் விளக்கங்கள் திருமுருகாற்றுப்படைக்குப் பொருந்தும் என்பதாகவே உள்ளன.ஆனால், தற்காலத்தில் மாறுபட்ட விளக்கங்களை அறிஞர் கூறுகின்றனர். “திருமுருகாற்றுப்படை தொல்காப்பியம் கூறாத ஒன்றாகும்”4 என்கிறார் டாக்டா்.மா.இராசமாணிக்கனார். “அன்பரை ஆண்டவனிடத்தே ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பிய இலக்கணத்திற்கு வேறானது”5 என்கிறார் டாக்டா்.மு.கோவிந்தசாமி.

“….சென்று பயனெதிர ஆற்றுப்படுத்தற்குரியா் கூத்தா் முதலிய நாற்பாலரேயன்றி வேறு யாருமிலா் என்று தொல்காப்பியா் வரையறுத்து ஓதாமையானும், பெற்ற பெருவளம் பெற்றார்க்கு அறிவுறுத்தலே அந்நூற்பா பகுதியிற் சிறப்புடைத்தாகலானும், பேரின்ப வீட்டினும் சிறந்த பெருவளம் பிறிதின்மையானும், புதிது புனையப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை முன்னை நூல் வழக்கொடு மேற்கூறியாங்கு சற்றே வேறுபாடுடையதாயினும் மற்று மாறுபாடுடைய தன்று”6 என்கிறார் புலவா் இலக்குவனார். இவரது கருத்திற்கு ஏற்பவே க.வௌ்ளைவாரணரும், “திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்கிறார்”7.

மேற்கண்ட விளக்கங்களை நோக்க திருமுருகாற்றுப்படைக்கு ஏற்ற வரையறையைத் தொல்காப்பியா் கூறவில்லை என்பதும், ஆனால் அதேநேரம் அது இத்திருமுருகாற்றுப்படை தொல்காப்பியா் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்துள்ளது என்பதும் புலனாகிறது.

Continue Reading →

ஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -பொதுவாகக் காலக் கணிப்பு என்பது அற்றைவாழ் சமுதாயப் போக்கை, நிகழ்வுகளை ஒட்டி நிருணயம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு என்பது அக்காலச் சூழல், நிகழ்வுகளை ஒட்டி முக்கூறு பெற்றதாகத் தோற்றம் தருகிறது. முதற்பகுதி அந்நியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் உருவான விடுதலை உணர்வுக்கான வேட்கையின் எழுச்சிக்காலம், இடைப்பகுதி வேட்கையின் தாகம் தணிவு பெறாத நிலை பிற்பகுதியோ புதிய சூழல், அறிவியல் கண்டுபிடிப்புக்களால் உருவான பல்வேறு வகையான போராட்டத்தின் உச்சகாலம். இக்கால இடைவெளியில் உருவான கண்ணதாசன் கவிதைகளுள் காணப்படும் பக்தி தொடர்பானவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கண்ணதாசன்
இவரின் வாழ்வமைப்பு என்பது ஒரே சீருடைத்தாகக் காணப்படவில்லை. காலச் சூழலுக்கும், தன் சூழலுக்கும் ஒப்ப இவரின் கவிதைகள் கருத்தாக்கம் பெற்றுள்ளன. நாத்திகவாதியாக, ஆத்திகவாதியாக இருவேறுபட்ட முரண்பட்ட நிலைகள் இவரில் காணப்படுகின்றன. இறுதி நிலைக்கவிதைகள் கடவுள் நம்பிக்கையில் உறுதிகொண்ட போக்கில் அமைந்து சிறக்கின்றன. இக்காலச் சூழலில் எழுந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாரதம், ஸ்ரீவெங்கடேச ஸ்தோத்திரம், ஸ்ரீவெங்கடேச ப்ரபத்தி ஆகிய மூன்று கவிதை நூல்களும் ஆய்வுக்குட்படுகின்றன.

பாடுபொருள்
கவிஞனின் படைப்புகளில் அவன் வாழ்கின்ற காலத்தின் தாக்கம், சுயவாழ்வின் நிகழ்வுகள் ஆங்காங்கு அவனையறியாமல் பிரதிபலிக்கும். கண்ணதாசன் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மூன்று கவிதைகளிலும் இவரின் சமகாலத்தாக்கம் என்பது காணப்படவில்லை. ஒரு நூல் எத்தகைய பொருட் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் வீடுபேறு அடைவதற்குரிய சமய உணர்வினைப் பெற்றதாக இல்லாவிட்டால் அந்நூல் ஒரு சிறந்த நூலாக மதிக்கப்படாது.  இதனை,

“அறம் பொருளின்பம் வீட்டைதல் நாற்பயனே”1

என்பதனால் உணரலாம்.  மக்கள் வாழ்வின் குறிக்கோள் வீடுபேறு அடைவதாகும்.  அவ்வீடுபேற்றினை அடைவதற்கு அடிப்படையாக அமைவது சமய உணர்வாகும்.  இச்சமய உணர்வினை,

“சமயம் என்பது மனிதனுக்கும், மனித நிலைக்கும் மேற்பட்டதாக உள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிக் கூறுவது.  சமயம் என்பதே புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின்பால் மனிதனுக்குள்ள நம்பிக்கைதான்”2 என்பர்.

Continue Reading →

பாலகுமாரனின் தாயுமானவன் நாவலில் பெண் சித்திரிப்பு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -பெண் மென்மையானவள், அமைதியானவள், அடக்கமானவள், சிந்திக்கும் தகுதியுற்றவள், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவள் என்று உருவாக்கி வைத்த கருத்தாக்கங்களும் அதனை நடைமுறைப்படுத்திய சமூகமும் இன்று மாற்றம் அடைந்து வருகின்றன. மக்கள் வாழ்வை வெளிப்படுத்துவதில் மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் நாவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே சமுதாயத்தில் மகளிரின் நிலை குறித்தும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தாயுமானவன் நாவலில் கூறும் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

பாலகுமாரனின் பெண்ணியச்சிந்தனை
பாலகுமாரன் அடிப்படையில் பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கிறார். அவருடைய எல்லாப் படைப்புகளும் பெண்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவைகளாக இருக்கின்றன. பெண்கள் தம் வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பல உள்ளன. பெண் என்பவள் குடும்பத்தைத் தாங்கும் தூண் போன்றவள். அவளாளையே குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் தூய்மையானதாகவும் பாசத்தின் பிறப்பிடமாகவும்  நம்பிக்கையின் தாயகவும் விளங்குகின்றது. இதனை, பாலகுமாரன்.

”யப்பா…! வேலை செய்யற இடம் முன்ன பின்ன இருக்கலாம் சரசு.வீடுன்ற இடம் நெஞ்சுக்கு இதமா இருக்கணும்.வீடு இதமா இருந்துச்சுன்னா எத்தினி துக்கமும், எவ்வளவு கஷ்டமும் சமாளிச்சுட முடியும். வீட்டை வீடா வச்சுக்கற பொம்பளை இருந்தா போறும், ஆயிரம் யானை பலம்.”( பாலகுமாரன், தாயுமானவன். பக்.127)

இவ்வாறு தம் ‘தாயுமானவன்’ எனும் நாவலில் கூறியுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவைத் தொடர்ந்து வருகின்றன. சிக்கல்களை அவர்கள் எதிர்க்கும் போது அவர்கள் ஆடவருக்கு எதிராகப் போராடுகின்றனர் எனும் நிலையும் உருவாகியது. மேலும், பெண் கணவனை நினைத்து தினமும் பயப்படுகின்றாள் என்பதை, ”உங்களையும் சுருட்டி கைக்குள்ள போட்டுக் கிட்டாங்களோன்னு பயம்தான்.” (மேற்படி. பக்.237) என்று கூறுகின்றார். பெண்களின் சிக்கல் என்பது வெறுமனே பெண்களின் சிக்கல்களாகா. அவை வாழ்க்கையின் சூழ்நிலைகளில் இருந்து வந்தவைகள் தான். அவற்றை பாலகுமாரன் தன் நாவல்களில் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

“வாழ்க்கை நாடகம்தான். எல்லாரும் எங்கோ ஓரிடத்தில் நடிக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான்.ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம்.அந்த உணர்வுக்குப் பெயர்தான் மென்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்.”(மேற்படி. பக்.66)

“மேல மேலன்னு போறவனுக்கு இடறத்தான் செய்யும்.கைபிடிச்ச பிடி நழுவிரத்தம் வரும்.சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும்.பல்லைக் கடிச்சுக்கிட்டு மேலே ஏறணும்.மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக் கூடாது சரசு.”(மேற்படி. பக்.125)

”சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும்.சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும்.வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.”( (மேற்படி. பக்.140)

வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பாலகுமாரன் குறிப்பிடுவதைப்போல மிக லாவகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாவல் இலக்கியங்கள் பொதுமைப்படுத்துகின்றன.

Continue Reading →