விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்

விலங்கு மருத்துவராகவிருந்து இலக்கியப்படைப்பாளியான நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீடு மெல்பனில் வாசிப்பு அனுபவங்கள் சங்கமித்த இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல் - ரஸஞானிபடைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் ” தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து ” என்றுதான் சொல்லிவருகிறார்கள்.  முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள். தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான்,  அவுஸ்திரேலியா  மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள்,  இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இவர் இங்கு தொடங்கிய உதயம் (இருமொழிப்பத்திரிகை) மாத இதழில் தனது தொழில் சார்ந்த அனுபவமாக முதலில் எழுதிய பத்தி: நடுக்காட்டில் பிரேத பரிசோதனை. நடேசன் விலங்கு மருத்துவராக மதவாச்சி தொகுதிக்கு அருகில் பதவியா பிரதேசத்தில் பணியாற்றியபோது, தந்தங்களுக்காக ஒரு யானையை சிலர் வேட்டையாடிக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை தேடிக்கைது செய்த பொலிஸார், அந்த யானையின் சடலத்தை பரிசோதனை செய்து மரணச்சான்றிதழ் பெறுவதற்காக நடேசனை  அழைத்துக்கொண்டு அந்த நடுக்காட்டிற்குச்சென்றார்கள்.

அந்த அனுபவத்தையே தனது முதல் பத்தி எழுத்தாக எழுதியிருந்தார் நடேசன். அத்தகைய புதிய பாணி எழுத்து வாசகர்களை ஈர்த்ததையடுத்து, தொடர்ந்தும் தனது தொழில் சார் அனுபவங்களை எழுதிவரலானார். அவ்வாறு எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு: வாழும் சுவடுகள். இதனை சென்னையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) எஸ். பொன்னுத்துரை நடத்திய மித்ர பதிப்பகம் வெளியிட்டது. பின்னர்,  வாழும் சுவடுகள் தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தினால் இரண்டாம் பதிப்பும் வெளியானது. அதனைத்தொடர்ந்து நடேசன் தனது பதவிய பிரதேச தொழில் சார் அனுபவங்களின் பின்னணியில் வண்ணாத்திக்குளம் என்ற நாவலையும்  எழுதினார். இதனையும் மித்ரவே வெளியிட்டது. இதன் இரண்டாம்  பதிப்பினை இலங்கையில் டொமினிக்ஜீவா அவர்களின் மல்லிகைப்பந்தல் வெளியிட்டது. வண்ணாத்திக்குளம் நாவலை மெல்பனில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. நல்லைக்குமரன் குமாரசாமி ஆங்கிலத்திலும் (Butter fly Lake) , இலங்கையில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரயே விஜேரத்தின சிங்களத்திலும் (சமணளவெவ) மொழிபெயர்த்தனர்.

Continue Reading →