‘முரண்’முரண்களை உள்ளடக்கிய சிறந்ததொரு தொகுப்பு!

கோமகனின் 'முரண்'வ.ந.கிரிதரன்எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் இணைய இதழ் ‘நடு’. ‘நடு’ இதழின் ஆணி 2019 இதழில் கோமகனின் சிறுகதைத் தொகுதியான ‘முரண்’ பற்றிய எனது விமர்சனமொன்று வெளியாகியுள்ளது. அதனை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். அண்மையில் வாசித்த புகலிடச் சிறுகதைகளில் சிறந்த சில சிறுகதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பு ‘முரண்’. குறிப்பாக ‘மாதுமை’ , ‘ஏறு தழுவல்’ என்னை மிகவும் பாதித்த சிறுகதைகள் என்பேன். வாழ்த்துகள் கோமகன். – வ.ந.கி –


எழுத்தாளரும், ‘நடு’ இணைய சிற்றிதழ் ஆசிரியருமான கோமகனின் மூன்றாவது வெளியீடான ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை அண்மையில் படித்தேன். எழுத்தாளர் கோமகன் என் முகநூல் நண்பர்களிலொருவர்.  அவரது எழுத்துகளை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது முகநூலில் ‘சுறுக்கர்’ என்ற பெயரில் அவர் போடும் பதிவுகள் மூலமே. சுறுக்கரின் பதிவுகளில் எப்பொழுதும் நகைச்சுவை பொங்கி வழியும். அவரது எழுத்துகளிலும் அவ்வுணர்வு நிறையவே இருக்குமென்று எண்ணியபடியே நூலை வாசிக்கத்தொடங்கினேன். முதலில் நூலின் அவரது ‘என்னுரை’யில் அவர் தொகுப்பின் கதைகளைப்பற்றிக் கூறியவை என் கவனத்தைச் சற்றே திசை திருப்பின. அதிலவர்:

“இத்தொகுப்புச் சிறுகதைகளில் நான் தனிப்பட்ட பல இடங்களில் முரண் பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதைசொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டு வரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களைப் பேசியிருக்கின்றேன். அவைகளில் நான் வெற்றி பெற்றிருக்கின்றேனா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன் என்பதை என்னால் உறுதிப்படச் சொல்ல முடியும். எனக்கு  இலக்கிய ஜாம்பவான்களைப்போல் சொல் கட்டத்தெரியாது. எல்லோருக்கும் வாலிப்பருவம் அதன் வசந்தத்தையும் ஊர் உறவு நண்பர்கள் என்று அள்ளிக்கொடுக்க, அதே வயதில் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் உபரி விளைவாக நான் அகதியாக அந்நிய தேசத்துக்குப் புலம் பெயர்ந்ததும் இந்தச் சொல் கட்டுக்குள் வராமைக்கு ஒரு காரணமாகின்றது.” என்று கூறியிருப்பார். அவரது இச்சுய விமர்சனத்தை மனத்திலிருத்தி நூலினை வாசித்தேன்.

இத்தொகுப்பின் கதைகள் ஒன்றைத்தவிர  இம்மாநிலத்தின் உயிரினங்களின் பல்வேறு ஆளுமைகளைப்பற்றி விபரிக்கும் விவரணச்சித்திரங்களாகவும் கொள்ளக்கூடியவை. ஏனெனில் மானுடர்களின், மிருகங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துபவை என்பதால் அவ்விதம் கூறினேன். அந்த ஒன்று ‘மயானம்’ ஒன்று தன் கதையை, தன்னைப்பாவிக்கும் மானுடர்களுக்கிடையிலான முரண்பாடுகளைப்பற்றிக் கூறுகின்றது. இறுதியில் அம்மானுடர்களின் முரண்பாடுகளால்  அம்மயானம் மின்சார மயானமாக மாறுவதுடன் முடிவுக்கு வருகின்றது.

நூலாசிரியர் தன்னுரையில் ‘பேசாப் பொருட்களை பேசியிருக்கின்றேன்’ என்று கூறியுள்ளதை மெய்ப்பிக்கும் வகையிலான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. தொகுப்பின் தலைப்புக்கதையான ‘முரண்’ அவ்விதமான கதைகளிலொன்று. முகுந்தன், மிருதுளா என்னும் இலங்கைத்தமிழ்த் தம்பதியின் கதை, தமிழர்கள் மத்தில் அதிகம் பேசப்படாத பொருளாகிய ‘தன்னினச்சேர்க்கை’ பற்றிப்பேசுகின்றது. நாயகன் முகுந்தன் சிறுவயதிலேயே மச்சான் முறையான உறவினனுடன் தன்னினச்சேர்க்கையில் ஈடுபட்டவன். வம்ச விருத்தியைப் பிரதான காரணமாகக்கொண்டு மிருதுளாவைத் திருமணம் செய்தாலும்  அவனது விந்து குழந்தைகளை உருவாக்குவதற்குரிய வீரியமற்றது. இந்நிலையில் மனைவி மிருதுளாவுக்குச் செயற்கைக் கருக்கட்டல் தொழில் நுட்பத்தின் மூலமும் அவள் குழந்தை பெறுவதற்கான முயற்சி நடைபெறுகின்றது. இடையில் அவன் மீண்டும் புகலிடச் சூழலில் தன்னுடன் பணிபுரியும் கொலீக் (சகபணியாளன்)  ஒருவனுடன் மீண்டும் ஒருபாலுறவுத் தொடர்பில் ஈடுபடுகின்றான். தன்னினச் சேர்க்கையாளர்கள் செல்லும் கிளப்புகளுக்குச் செல்கின்றான். இதற்காக அவன் கிரடிட் கார்ட்டில் எடுக்கும் பண விபரத்தைக் கண்டு, அவன் ஒரு பாலுறவுக்காரனென்பதை அறிந்து, அவனிடம்  கூறாமலேயே அவனை விட்டுப்பிரிந்து செல்கின்றாள் மிருதுளா. இது பற்றிய ஆசிரியரின் விபரிப்பு பின்வருமாறிருக்கும்:

Continue Reading →