அண்மையில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் சங்கிலியன் பற்றிய கட்டுரையொன்றினை கனடாவிலிருந்து வெளியாகும் ‘உலகத்தமிழர்’ பத்திரிகை தனது மே 31- ஜூன்06 பதிப்பில் ‘அரசியல் கட்டுரை’யாக ‘சங்கிலியனும் சிவசேனையும்’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் ஆய்வாளர் நிலாந்தன் சங்கிலியன் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
” சங்கிலியன் முதலாவதாக யாழ்ப்பாணத்தின் கடைசி அரசன். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப்போராடி தோற்கடிக்கப்பட்ட ஒரு மன்னன். அவனுடைய அரசுதான் யாழ்ப்பாணத்தின் கடைசி தமிழ் அரசு ஆகும்….. இரண்டாவதாக சங்கிலியன் தனது சொந்த மக்களில் சுமார் 600 பேர்களை வெட்டிக்கொன்றான் என்று ஒரு குற்றச்சாட்டு. மன்னாரில் போர்த்துக்கீசரால் மதம் மாற்றப்பட்ட சுமார் 600 க்கும் குறையாத தமிழ் மக்களை சங்கிலியன் வேட்டையாடியதாக குற்றஞ் சாட்டப்படுகிறது’
சங்கிலியன் என்னும் மன்னரைப்பற்றிய சரியான விளக்கம் பொதுமக்களுக்கு வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். ஓர் அரசியல் ஆய்வாளருக்கு இல்லாமல் போகலாமா? இலங்கைத்தமிழ் மன்னர்களின் யாழ்ப்பாண அரசின் வரலாற்றில் சங்கிலியன் என்னும் பெயரில் இருவரின் பெயர்கள் காணப்படுகின்றன. இம்மன்னர்கள் மாறி மாறி யாழ்ப்பாண அரசை ஆண்ட போது தமது பெயர்களை செகராசசேகர்ரன், பரராசசேகரன் என்னும் பட்டப்பெயர்களுடன் ஆண்டு வந்தார்கள். இவர்களில் முதலாவது சங்கிலி மன்னன் ஏழாம் செகராசசேகரன் என்னும் பெயரில் 1519 தொடக்கம் 1561 வரை நாற்பதாண்டுகள் ஆட்சியிலிருந்தவன். இவன் இவனுக்கு முன் ஆண்ட ஆறாவது பரராசசேகரனின் மூன்றாவது மனைவி மங்கத்தம்மாளின் மகனாகக் கருதப்படுபவன்.
சங்கிலி 2 சங்கிலி குமாரன் என்னும் பெயரில் 1616 தொடக்கம் 1620 வரை நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவன்.
யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைப்பற்றிய நூலான மாதகல் மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலானது கைலாயமாலை, வையா பாடல், பரராசசேகரனுலா மற்றும் இராசமுறை என்னும் நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பதை யாழ்ப்பாண வைபவமாலை நூலின் பாயிரத்திலுள்ள செய்யள் கூறும். யாழ்பபாண வைபவமாலையின் காலகட்டத்தை அதன் பாயிரத்தில் கூறப்படும் ஒல்லாந்து தேசாபதியின் பெயரின் அடிப்படையில் கிபி.1736 என்று கருதலாம் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆகியோரின் கருத்து. ஏற்கக்கூடிய தர்க்கம்.
மயில்வாகனப்புலவர் சங்கிலியன் மன்னர்கள் இருவரின் வாழ்க்கை வரலாறுகளையும் ஒன்றாக்கிக் குழப்பியடித்த விபரங்களை யாழ்ப்பாண வைபவமாலை நூலை அக்காலகட்டத்தில் சிங்களவர்கள் மற்றும் போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர் போன்றோரின் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு, ஆராய்ந்து சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் அண்மையில் பேராசிரியர் சிற்றம்பலம் போன்றோர் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். சுவாமி ஞானப்பிரகாசரின் ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ இவ்வகையில் மிகவும் முக்கியமான நூல்களிலொன்று.