சங்க இலக்கியத்தில் சங்க தமிழரின் வாழ்வயிலைக் காட்டும் கண்ணாடி. சங்கத் தமிழர் இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். மனிதன் விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் விலங்கைத் தாக்கி வீழ்த்தி வாழ முற்பட்ட நிலையில் வேட்டைத் தொழில் தோன்றியிருக்க இடமுண்டு. அன்று தொடங்கி இந்தத் தொழில் காலந்தோறும் வளர்ந்து தற்காலத்தில் ஒரு கலையாகப் போற்றப்படுகின்றது. காலமாற்றத்தால் இக்கலை இன்று வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதும் சுட்டத்தக்கது. சங்க காலத்தில் ஐந்நிலமக்களும் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டன என்று அறிய முடிகின்றது. உணவு தேடுதல், பொருளீட்டல் என்ற அடிப்படைகளில் வேட்டைகள் நிகழ்ந்தன. வேட்டைத் தொழிலில் வேட்டையாடப்படும் பொருளாகவும், வேட்டையாடுவதற்கு உதவியாகவும் விலங்குகள் இருந்தன என்று இக்கட்டுரை வாயிலாக வெளிக்கொணர முற்படுப்படுகின்றது.
வேட்டையாட ஆராய்தல்
வேட்டைக்குச் செல்பவர் குறித்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்து வேட்டையாடுவர். குறவர்கள் இரவுநேரத்தில் விலங்குகளை ஆராய்ந்து தேடித் திரிந்ததை,
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன்சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்துப் படினே (மலைபடு:273-275)
என்னும் மலைபடுகடாம் அடிகளின் மூலமாக பெரும் கௌசிகனார் விளக்கின்றார். இதனைப் போலவே நற்றிணை அடிகளில் வருவதை,
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென (நற்.389:4-5)
குறிஞ்சிநிலத் தலைவன் விலங்கின் வேட்டை மேற்சென்றதை காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் புலவர் நற்றிணை அடிகளின் வழியாக விளக்கின்றார். இதன் வழி சங்ககால மக்கள் விலங்குகளை ஆராய்ந்து வேட்டையாடியமை புலப்படும்.
யானை வேட்டை
யானையைக் கோட்டின் பயன்கருதி வேட்டையாடியுள்ளனர். குறிஞ்சிநில வேட்டுவன் வெண்கடம்ப மரத்தின் பின்நின்று களிற்றின் மார்பில் அம்பைச் செலுத்திக் கொன்றனன். பிறகு அதனின்று எடுத்து வந்த வெண்கோட்டைப் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றியதை,
இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்தி கோல்தெரிந்து
வரி நுதல் யானை அருநிறத்து அழுத்தி
இகல்அடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி (அகம்.172:6-10)
என்னும் அகநானூற்றுப்பாடலடிகள் மூலமாக மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் கூறுகின்றார். குறிஞ்சிநிலத்தில் புலியுடன் போர் செய்த யானை புண்பட்டுக் கிடந்ததை,
புலியொடு பொருத புண் கூர் யானை
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர் (நற்.65:5-6)
அதன் தந்தத்தை எடுக்கக் கருதிய வேடர்கள் அதன்மீது மீண்டும் அம்பெய்து துன்பப்படுத்தினர் என்பதை நற்றிணை பாடலடிகளின் மூலமாக கபிலர் வாயிலாகக் கூறுகின்றார். அவ் யானை இறந்தபின் அதனின்று தந்தத்தைக் கவர்ந்தனர். பாலைநில மறச்சாதியினர் தம் வில்லைக் கொண்டு வழிப் போக்கர்களைத் துன்புறுத்தியதை,
கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடும் கண் யானைக் கானம் நீந்தி
இறப்பர் கொல்.. (குறுந்.331:3-5)
காட்டிலுள்ள யானைகனைக் கொன்று தந்தங்களையும் கைப்பற்றினர் என்பதை குறுந்தொகைப் பாடலடிகளின் மூலமாக வாடாப்பிரபந்தனர் புலவரின் அறியமுடிகிறது.