யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளான மே 31 பற்றி முகநூலுட்படப் பல்வேறு ஊடகங்களில் அது பற்றிய பதிவுகள் பலவற்றைப்பார்த்தோம். இன, மத , மொழி வேறுபாடின்றிப் பல்லின மக்களும் நூலக எரிப்புக்காக மனம் வருந்துகின்றார்கள். சிங்கள எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களும் அவர்களிலொருவர். இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொண்ட சிங்கள மக்களில், எழுத்தாளர்களிலொருவர். அண்மையில் வெளியான அவரது நாவலும் கூட அவரது வடக்குப் பயணத்தின்போது அவர் கேட்டு, அறிந்த , அனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று புதன் கிழமை வெளியான (ஜூன் 5, 2019) ‘ரச’ பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் ‘எரியும் இதயம்’ என்னும் தலைப்பில் யாழ் நூலக எரிப்பு பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரை ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் இப்பத்திரிகையின் புதன் கிழமைக்கான பதிப்பில் வாரம் தோறும் அவர் எழுதும் பத்திக்கான இவ்வாரக் கட்டுரையாகும்.
இக்கட்டுரையில் அவர் நூலகம் எரியுண்டதன் பின் ஊடகங்களில் வெளியான நூலகர் ரூபாவதி நடராஜா அவர்கள் நூலகப் பணியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘நூலகர் ரூபாவதி நடராஜாவின் வெறுமையான பார்வை என் இதயத்தை வேதனையால் எரிக்கின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பந்தியில் நூலக எரிப்பு பற்றிய எனது கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் வெளியான எனது கருத்துகளில் நூலகம் எவ்வாறு என் மாணவப்பருவத்தில் உதவியது என்பது பற்றியும், அங்கு நான் வாசித்த பல் துறை நூல்கள், மொழிபெயர்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டதுடன் ‘நூலகங்களே எனது ஆலயங்கள்’ என்ற எனது கருத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கட்டுரையை அவர் முகநூலிலும் பதிவு செய்துள்ளார். அதனை வாசித்த சிங்கள மக்கள் பலர் அதனைப் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் , நூலக எரிப்புக்கான அவர்கள்தம் வருத்தத்தையும் எதிர்வினைகளில் பதிவு செய்துள்ளார்கள்.
இன்று மாலை (ஜூன் 4, 2019) ஸ்கார்பரோவில் மார்க்கம் & மக்னிகல் பகுதியில் 2901 மார்க்கம் றோட் என்னும் முகவரியில் அமைந்துள்ள , நட்பான பணியாளர்களைக் கொண்ட ‘தோசா ராமா’ உணவகத்தில் நண்பர் எல்லாளனுடன் (‘ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்’ நூலாசிரியர்) திரைப்பட இயக்குநர் புதியவன் ராசையாவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனது திரைப்படங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவரான புதியவன் ராசையா அவர்கள் தற்போது அவரது திரைப்படமான ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தினைக் கனடாவில் திரையிடுவதற்காகத் தற்சமயம் கனடாவுக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே இவர் ‘மாற்று’ (2001), ‘கனவுகள் நிஜமானால்’ (2003), ‘மண்’ (2005) & ‘யாவும் வசப்ப்டும்’ (2015) ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை RSSS என்னும் தமிழக நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். படத்துக்கு இசையமைத்துள்ளவர் அண்டாவக் காணோம், காஞ்சனா, சதுரங்க வேட்டை 2 போன்ற பல படங்களில் பணியாற்றிய அஷ்வமித்ரா. படத்தின் ஒளிப்பதிவாளர் இலங்கையைச் சேர்ந்த மகிந்த அபேசிங்க. இவர் சர்வதேச விருது பெற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைத் தொகுத்திருப்பவர் சுரேஷ் அர்ஸ். இத்திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களில் புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன் மற்றும் தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 37 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகி, இசை, ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு போன்றவற்றுக்காக விருதுகளைப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூன் 9, 2019 அன்று 5637 ஃபிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் , யுனிட் 1 என்னும் முகவரியில் காலை மணி பதினொன்றுக்கு இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. கட்டண விபரங்கள்: கடைசி வரிசை 20 & முதல் வரிசை 50 & 100. மேலதிக விபரங்களுக்கு 416.834.6618 / 437.241.9526 என்னும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளுங்கள். இத்திரைப்படம் 14.06.2019 அன்றும் ‘டொராண்டோ’வில் மீளத்திரையிடப்படவுள்ளதாகவும் அறிகின்றேன்.
புதியவன் ராசையா பற்றி அறிந்திருந்தாலும் அவரைச் சந்திப்பது இதுவே முதற் தடவை. சிலருடனான முதற் சந்திப்பு நன்கு அறிமுகமான ஒருவருடனான சந்திப்பைப்போன்று அமைந்துவிடுவதுண்டு. புதியவன் ராசையாவுடனான சந்திப்பும் அத்தகையது. புதியவன் புதியவராகத் தெரியவில்லை. நன்கு அறிமுகமான பழையவர் ஒருவரைப்போன்றே தென்பட்டார். எடுத்த எடுப்பிலேயே மிகவும் இயல்பாக உரையாடத்தொடங்கினார். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை , தேர்வுகளை, பரிந்துரைகளைப்பெற்ற திரைப்படமான ‘ஒற்றைப்பனைமரம்’ திரைப்படத்தின் , இயக்குநரான புதியவன் ராசையாவின் எளிமையான பண்பு என்னைக் கவர்ந்தது. சந்திப்பின் நேரம் குறுகியதாகவிருந்தபோதும் அவரைப்பற்றி, அவரது ஆளுமையைப்பற்றி நன்கு அறியக்கூடியதாக அவருடனான உரையாடல் அமைந்திருந்ததில் மகிழ்ச்சியே. உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவரது ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இன்று வரையிலான அவரது அனுபவங்கள் பலவற்றை அறிய அவ்வுரையாடல் மிகவும் உதவியது என்றே கூறுவேன். ஏற்கனவே ‘மண்’ என்னும் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்ற இயக்குநர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாங்கிய தத்துவம் பற்றியும் அதன் அடிப்படையான அம்சம் பற்றியும் அவர் உரையாடியது அவரது பன்முகப்பட்ட அறிவினை வெளிப்படுத்தியது.
venkat_swaminathan_new_a
Copyright © 2025 இரவி — Primer WordPress theme by GoDaddy