தாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.
அ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த – அவதானிந்த – மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.
ஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.எஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.
சமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.
இத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.