” ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன், அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன் ” – இந்தப்பாடலை எங்கள் மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல். ஒரு சிறிய பூங்காவில்தான், இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது. அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவி, கலை, திரை, அரசியல் வாழ்க்கைச் சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம். சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது. இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், நர்மதா பதிப்பகம், தமிழ்ப்புத்தகாலயம், தாமரை- ஜனசக்தி காரியாலயம், கணையாழி அலுவலகம் இப்படியாக பல.
கண்ணதாசன் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது மகன்மார் காந்தி -அண்ணாத்துரை குடும்பத்தினர் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்குதான் கண்ணதாசன் பதிப்பகமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. முன்னர் ஹென்ஸ்மன் ரோடு என அழைக்கப்பட்ட இந்த வீதி கண்ணதாசன் சாலை என மாற்றப்பட்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல் காந்தி கண்ணதாசன் குடும்பத்தினருடன் எனக்கு நெருக்கமான நட்பு. கண்ணதாசனின் துணைவியார் பார்வதி அம்மா, அந்த இல்லத்தின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு என்னுடன், கவிஞரைப்பற்றிச்சொன்ன பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றுதான் ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடல் பிறந்த தகவல்.
ஒரு காலத்தில் கவிஞரிடம் பாடலுக்காக வந்து தத்தமது கார்களை அடுத்தடுத்து நிறுத்திவிட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமர்ந்திருந்த அந்த இல்லத்தின் விறாந்தாவிலிருந்துதான் பார்வதி அம்மா என்னுடன் நீண்டநேரம் உரையாடினார்கள். இது நடந்தது 1984 ஆம் ஆண்டு. 1990 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களை நான் விஜயா மருத்துவமனையில்தான் பார்த்துப்பேசினேன். 84 இல் சந்தித்தபொழுது, எத்தனை பிள்ளைகள்..? எனக்கேட்டார்கள். இரண்டு பெண்குழந்தைகள் என்றேன். ” அப்படியா, அடுத்தது ஆண்தான். கண்ணன் பெயராக வைங்க. ” என்றார்கள். அவர்களின் வாக்கு தேவ வாக்காக இருக்கவேண்டும். எமக்கு மகன் கண்ணதாசன் பிறந்த நாளன்றே ஜூன் 24 ஆம் திகதி 87 ஆம் ஆண்டு பிறந்தான். முகுந்தன் எனப்பெயர் வைத்தேன்.விஜயா மருத்துவமனையில் திருமதி கண்ணதாசனிடம் “ அம்மா உங்கள் வாக்குப்படியே நடந்துவிட்டது. மகனுக்குப்பெயர் முகுந்தன் என்றேன். “அப்படியா? வந்திருக்கானா? கூட்டிக்கொண்டு வாப்பா’ என்றார்கள். ” நாளை இரவுதான் இலங்கையிலிருந்து வருகிறான். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துவிட்டேன். நாளை நிச்சயம் அழைத்து வருவேன்” என்றேன். ஆனால், அதற்கு முன்பே கவிஞர் கண்ணதாசன் தன்னிடம் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டுவிட்டார். அதாவது பார்வதி அம்மா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பாமலேயே மேலுலகம் சென்றுவிட்டார். காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் என்ற பாவமன்னிப்பு திரைப்படப் பாடலை, இந்த காதல் மனைவியை மனதிலிருத்தியே கவிஞர் எழுதியிருந்தார்.