‘ஈழத்தில் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் நிறைந்து காணப்பட்ட 1940 -களின் பிற்பகுதியில் ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக, தமிழ்ப்பற்றாளராக, நல்ல தமிழாசானாக, பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெரியோர்வரை பாடிக்களித்திட பாடல் தந்த கவிஞராக, உணர்ச்சிமிக்க பேச்சாளராக, ஆய்வுக் கட்டுரையாளராகப் பர்ணமித்துத் தமிழறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தவர்;. தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு தமிழ்ப்பணியாற்றியவர்;. இந்நாட்டில் தமிழர் சமவுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழவேண்டுமென்ற தணியாத தாகம் மிகக்கொண்டவராக, எழுத்திலும் பேச்சிலும் அதனை வலியுறுத்தியவர் வித்துவான் வேந்தனார் ஆவார்.’ இவ்வாறு, பாரிஸ் மாநகரில் கடந்த ஞாயிறு மாலை (23 – 06 – 2019) நடைபெற்ற வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா நூல்கள் வெளியீட்டு நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் – ‘கலாபூஷணம்’ வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது :- ‘நாட்டிற்காய் இளைஞர் கூட்டம் கிளர்ந்தெழுதல் வேண்டுமென அவரது ‘அவளும் அவனும்’ என்னும் காவியத்தில்வரும் கருத்துக்கள் தீர்க்கதரிசனமானவையெனப் பலர் குறிப்பிட்டுள்ளனர். ‘அறப்போருக்கு அறைகூவல்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அவர் எழுதிவந்த கவிதைகள் கவனத்துக்குரியன. ‘ஈழகேசரி’யில் அவர் எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் அப்பத்திரிகை ‘இலக்கிய அரங்கம்’ என்ற விவாதமேடையையே அமைத்து தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரித்தது. அதனால் வித்துவான் வேந்தனார் தமிழ்ப்பற்றாளர் எல்லோரதும் கவனத்துக்குரியவரானார்.
யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் 1951 -ம் ஆண்டு ஏப்ரல் 29, 30, மே 1 -ம் திகதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ்விழா’ சிறப்பாக நடைபெற வேந்தனார் முன்னின்று செயற்பட்டார். தமிழகம், பெங்கள10ர், புதுடில்லியைச் சேர்ந்த சுமார் 18 -க்கு மேற்பட்ட தமிழறிஞர்களும், இலங்கையின் பத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்களும் இவ்விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்தமை வரலாறு. இவ்விழாவில் மூன்றாம் நாள் இறுதிப் பேச்சாளராகக் கலந்துகொண்ட வித்துவான் வேந்தனாரின் ‘வாழும் இலக்கியம்’ என்ற தலைப்பிலான சிறப்புரையைத் தமிழகத்துத் தமிழறிஞர்கள் செவிமடுத்து வியந்து பெரிதும் மெச்சினர்.