வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா(நடராஜா நவரத்தினம் – நில அளவையாளரான அவரைப் பலர் ‘Tall Nava’ என்று அறிந்திருக்கின்றார்கள்). தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக ‘ஷெல்ஃப்’ ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணனின் நாவல்களும் ஓரிரண்டிருந்தன. டி.இ.லாரண்ஸின் ‘லாரண்ஸ் ஒஃப் அராபியா’ (Lawrence of Arabia) . இவற்றுடனிருந்த இன்னுமொரு நூல் டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’.
என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். அப்பா என்றதும் கூடவே நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் அப்பாவுடன் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள். என் சிறு வயதில் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் என்னைத் தன்னுடன் ஆங்கிலத்திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றார். ‘சீன் கானரி’ ஜேம்ஸ் பாண்டாக நடித்த ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ , ‘பரபாஸ்’, ‘பெனஹர்’ அடுத்தது ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’. இவற்றில் முதலாவதைத்தவிர ஏனையவை பைளிள் கதைகளை ஆதாரமாகக்கொண்டவை. இத்திரைப்படங்கள் அவருக்குப் பிடித்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று அவற்றில் நடித்திருந்த நடிகர்கள். இவர்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ‘ஹாலிவூட்’ நடிகர்கள். பாண்ட் திரைப்படத்தில் சீன் கானரி. பரபாஸில் அந்தனி குயின். பென்ஹர், டென் கமாண்ட்மென்ட்ஸில் சார்ள்டன் ஹெஸ்டன். இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள். இதன் மூலம் என் பால்யகாலப்பருவத்திலேயே இந்நடிகர்கள் எனக்கும் அறிமுகமானார்கள். பின்னர் என் பதின்ம வயதுகளில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் பலவற்றைத் தேடித்தேடிப்பார்ப்பதற்கு அப்பாவுடன் சென்று பார்த்த இத்திரைப்படங்களே காரணம்.
அக்காலகட்டத்தில் அவருக்குப்பிடித்த நடிகர் சிவாஜி. எனக்கோ எம்ஜிஆர். பாலச்சந்தரின் திரைப்படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். அவை பற்றியும் அவர் அம்மாவுடன் உரையாடுவார். குறிப்பாக எதிர் நீச்சல், பாமா விஜயம் ஆகியவை பற்றிய அவரது அம்மாவுடனான உரையாடல்கள் நினைவிலுள்ளன. எதிர் நீச்சல் படத்தில் வரும் நாயர் (முத்துராமன்) மற்றும் மாது (நாகேஷ்) பாத்திரங்களை அவர் பெரிதும் இரசித்தார்.