அறிமுகம்
வண்டுவிடுதூதும் வளர்பிறையும் அறியாதார் ஈழத்து இலக்கிய உலகில் இருக்கமுடியாது. சிறந்ததொரு கவிஞராகக் கால்பதித்து வேரூன்றிய திரு மு.செல்லையா அவர்களின் நுண்மதியும் பன்முக ஆளுமையும் அவரை ஓர் யுகபுருஷராக மிளிரச் செய்துள்ளது. நல்ல தமிழ் ஆசிரியராக, நிருவாகியாக, தலைசிறந்த கவிஞராக. சோதிடராக ஆற்றல் மிகுந்த தலைமைத்துவப் பண்புடையவராக வாழ்ந்து காட்டியமை அவருடைய பல்பரிமாணத் திறன்களுக்குச் சான்றாகும். கவிஞர் அவர்களுடைய தொலைநோக்கும் அவற்றை அடைவதற்குரிய காலத்தோடு ஒட்டிய செயற்பாடுகளும் முழுத்தமிழ்ச் சமுதாயமே போற்றுமளவுக்கு அமைந்திருந்தமை அவரது வெற்றியாகும். எமது சமுதாயங்களின் வளர்ச்சிப் பாதைகள் ஒவ்வொன்றிலும் கவிஞர் அவர்களின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளன. அவருடைய வகிபாகங்கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் காலச்சூழலோடு ஒட்டிப் பார்க்கும்போது தெளிவாகப் புலப்படும்.
மு. செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகள்
திரு மு.செல்லையாவின் சமூக அசைவியக்கத்துக்கான கல்விச் செயற்பாடுகளை அவர் தலைமை ஆசிரியராகச் செயற்பட்டமை, ஆசிரியர்களை உருவாக்கியமை, பாடசாலையை உருவாக்கியமை மற்றும் கல்வி மேம்பாடு குறித்து மாணவர்களை ஊக்குவித்தமை முதலிய விடயங்களின் கீழ் ஆராயலாம்.
வடமராட்சியில் செயற்பட்டுவந்த பல உயர்சைவப் பாடசாலைகள் மிகவும் மட்டுப்படுத்திய நிலையில் சிறுபான்மை மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருந்தாலும் அவை உரியமுறையில் உரிமைகளை அனுபவிக்க இடமளிக்கவில்லை. அக்காலத்தில் கிறீத்தவ மதநிறுவனங்கள் உருவாக்கிய பாடசாலைகள்கூட உயர் சமூகத்தவரின் எதிப்புகளுக்கு அஞ்சியவையாக கற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்த விரும்பாத சூழலில், எமது சமூகத்தவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்ய வேண்டுமானால் தனியானதொரு பாடசாலை அமைக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிகஉறுதியாக இருந்தனர். இத்தகைய முனைப்பான சிந்தனையே சைவகலைஞான சபையின் வழிநடத்தலால் தேவரையாளிச் சைவவித்தியாசாலை உருவாகக் காரணமாயிற்று. எமது சமூகத்தவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தேவரையாளிச் சைவ வித்தியாசாலையும் பிற்காலங்களில் தேவரையாளி இந்துக் கல்லூரியும் செய்த பங்களிப்புப்பற்றி நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். தேவரையாளிச் சைவ வித்தியாசாலையில் உபாத்தியாயர் அவர்கள் 24 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்தமுறையில் அதனை நடாத்தி வெற்றிகள் கண்டார். இக்காலத்தில் தேவரையாளி சைவ வித்தியாசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாக இருந்தாலும் பாடசாலையின் அயற்சூழலில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் கல்வியில் பங்கேற்பதற்குரிய விழிப்புணர்வு உண்டாயிற்று. பெற்றோரும் பிள்ளைகளும் கல்வியில் ஊக்குவிக்கப்பட்டனர்.
ஆயினும், இப்பாடசாலை எதிர்நோக்கிய முக்கியமான அறைகூவலாக சைவசமயம் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர்கள் இன்மை அமைந்தது. ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருந்தார்கள் எனினும் சைவப்பாடசாலை ஒன்றின்; அடிப்படைத் தேவைகளை அவ்வாசிரியர்களால் நிறைவுசெய்ய முடியவில்லை
இத்தருணத்தில் உபாத்தியாயர் அவர்களின் முதன்மையானதும் முக்கியமானதுமான பணி பாடசாலைக்குத் தேவையான சைவஆசிரியர்களை உருவாக்குதலாக அமைந்தது. திரு கா.சூரன் அவர்களின் வழிகாட்டலில் தமிழை நன்கு கற்று, தமது ஆற்றலை மேம்படுத்திக் கொண்ட உபாத்தியாயர் அவர்கள் தாமே முன்னின்று தமது மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களை ஆசிரியர்களாக உருவாக்கினார். ஆசிரியர் தொழிலுக்கு மெருகூட்டும் வகையில் அன்றைய காலச் சூழலுக்கேற்ற எதிப்பார்ப்புகளைத் துரிதமாக மேம்படுத்தும் என்ற தொலைநோக்கு இங்கு வெற்றி காணப்பட்டுள்ளமை சமூக அசைவியக்கத்திற்கான அடிப்படையாகும். இன்று எங்கள் சமூகங்களில் அநேகர் ஆசிரியர்களாக இருப்பதற்கும் அவர்களின் வழிகாட்டலில் அநேகமானோர் கல்வியில் முன்னேறியிருப்பதற்கும் இப்பணி மூலக்கல்லாய் அமைந்தது.