– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் மார்ச் 2002 இதழ் 51
[திண்ணை இணைய இதழின் விருந்தினர் பகுதியில் இடம்பெற்ற விவாதத்திலிருந்து சில பகுதிகள். பதிவுகளில் ஏற்கனவே வெளியான பகுதி. பதிவுகளின் வாசகர்களுக்காக மீண்டுமொருமுறை இங்கு பிரசுரிக்கின்றோம். இவ்விவாதத்தில் தொடர்ந்தும் பங்கு பற்ற விரும்பினால் எமக்கொன்றும் ஆட்சேபனையில்லை.]
நரேஷ்:
ஜெயமோகன் – மாலன் கட்டுரைகள் தொடர்ந்து கலாச்சாரம் பற்றிய விவாதங்களைப் படித்து வருகிறேன். உண்மையில் எனக்கு மட்டும் தான் புரியவில்லையா , அல்லது எல்லோருக்குமே இதே கதியா என்று தெரியவில்லை. மாலன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை ஆடியன்ஸ் என்ற பொருளில் பயன்படுத்துகிறார் போலத்தோன்றுகிறது. ஜெயமோகன் தமிழ்க்கலாச்சாரம் என்பதனை, ஜெயமோகன் தான் எந்த நோக்கில், அல்லது உருவாக்கப்பட வேண்டிய ஐடியல் என்ற நோக்கில் புரிந்து எழுதுவது போலத் தோன்றுகிறது. இருவருக்கும் மனப்பகையால் ஒருவர் எழுதுவதை மற்றொருவர் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொள்ள முடியாமல் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டுவிட்டார்களா, அல்லது எனக்குத்தான் பத்தவில்லையா என்று புரியவில்லை. இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை யாரேனும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியுமா? மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்.
ஜெயமோகன்:
அன்புள்ள நண்பருருக்கு, தங்கள் குழப்பம் சற்று அதிகமானதே. மாலன் கலாச்சாரம் என்றால் நெறிகள், அறங்கள், ஒழுக்கங்கள், விதிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றி¢ன் தொகுப்பாக மட்டும் பார்க்கிறார் [அதாவது ஒட்டு மொத்தமாக விழுமியங்கள்]அவை சமூகத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தால் ,அதை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு ,உருவாக்கப்படுபவை என்கிறார் .இது ஒரு மரபான பொருளாதார அடிப்படைவாத பார்வை. பொதுவாக பலராலும் நம்பப்படும் தளம் இது. இவர்கள் இலக்கியமென்றாலே உயரிய கருத்து மட்டுமே என்று எப்போதும் சொல்வதை பார்க்கலாம்.இலக்கியம் என்றால் கருத்து மட்டுமல்ல அக்கருத்துக்களை உண்டு பண்ணும் அகம் குறித்த புரிதலுக்கான முயற்சி அது என்ற எண்ணம் தேர்ந்த வாசகனுக்கே ஏற்படுகிறது. இலக்கியம் குறியீட்டு இயக்கமான மனத்தை அக்குறியீட்டு வடிவிலேயே போய் அறிந்து கொள்வதற்கான முயற்சி என்று சொல்லிப்பர்க்கலாம் இந்த முரண்பாட்டின் தொடர்ச்சியே இந்த விவாதம். நான் கலாசாரம் என்பது விழுமியங்கள் மட்டுமல்ல என்கிறேன். எந்தெந்த விஷயங்களை ஒரு சமூகம் தொடர்ந்து தலைமுறைமுறையாக பேணுகிறதோ அவையெல்லாம் கலாசாரத்தின் கூறுகளே என்று சொல்கிறேன்.அவை வெறுமே பொருளாதார காரணங்களால் மட்டும் உருவாக்கப்பட்டு நிலை நிறு¢த்தப்படுபவை அல்ல . சமூகத்தின் எதிர் காலக்கனவுகள் , இறந்த கால நினைவுகள் என எண்ணற்ற கூறுகளால் ஆனவை அவை. தனிமனத்திலும் ,சமூக மனத்திலும் உள்ள குறியீட்டு ரீதியான இயக்கங்களை அவை தீர்மானிக்கின்றன.விழுமியங்களும் அவற்றின் விளைவுகளே .அந்த செயல்பாடுகளுடன் எல்லாம் தொடர்பு படுத்தி மட்டுமே கலாச்சாரம் என்றால் என்ன என்று தீர்மானிக்க முடியும். கலாச்சாரம் என்பது மிக வும் சிக்கலான ஓர் கூட்டு அகவய இயக்கம் என்ற புரிதலே அச்செயல்பாடுகளை புரிந்து கொள்ள உதவிகரமானது . ஒரு இடத்தில் அதை நாம் நெறிகளாக அறிகிறோம்.இன்னொரு இடத்தில் அதை அடையாளங்களாக. இன்னொரு இடத்தில் பழக்கவழக்கமாக. இவை அனைத்தையும் இணைத்தே யோசிக்கவேண்டும் என்கிறேன் , இவ்வளவுதான் ஆகவே விழுமியங்களை பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல கலாசார செயல்பாடு. அடையாளங்களை மீட்பது ,நிலைநிறுத்துவது,தகர்ப்பது ,மேலும் நுட்பமாக்குவது,பழக்கங்களின் உள்ளர்த்தங்களை அறிவது எல்லாமே கலாச்சார இயக்கங்களே . ஈவேராவின் சீர்திருத்த குரல்போலவே ஆபிரகாம் பண்டிதரின் இசை நுட்ப ஆராய்ச்சியும் கலாச்சார செயல்பாடேயாகும். தமிழுக்கு பாரதி அளித்த கொடை உலக இலக்கியத்துக்கும் உலக கலாசாரத்துக்கும் உரியதேயாகும். பிறிதொரு தருணத்தில் இதை மேலும் விரிவாக விவாதிக்கலாம். ஒன்றுண்டு , விவாதங்களே நம்மை தெளிவாக சிந்திக்க வைக்கும். ஒரு அசலான கருத்தை உருவாக்கியெடுத்து ஒரளவு தெளிவுடன் முன்வைப்பது எளிய விஷயமல்ல .நான் எந்த விவாதத்திலும் எப்போதும் தயங்காமல் கலந்து கொள்பவனாகவே இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் சிந்தனையை அவ்விவாதங்களே ஒழுங்கு படுத்துகின்றன ,தெளிவாக்குகின்றன என்பதே. மாலனுடனான விவாதமும் அப்படித்தான்.ஆனால் அதில் விவாதத்துக்கு அப்பால் சில சிறு கோபங்களும் உருவாகிவிட்டன என்பதை மறுக்க முடியாதுதான்.அதை தவிர்க்க முடிவது இல்லை .