– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
பதிவுகள் செப்டம்பர் 2005 இதழ் 69 –
உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.
அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ… எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.
இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் – அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.
அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். ‘அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.’