வாய்மொழி வழக்காறுகள் மானுட வாழ்வின் அறிவின் சேகரமாகும். அவை பெரும் தலைமுறை தொடர்ச்சியினைக் கொண்டவை. வாழ்வியல் சூழலோடு பிணைந்து நிற்கின்ற இந்த வழக்காறுகள் அவர்தம் வாழ்வியல் விழுமியங்களையும் பறைசாற்றுபவை. அர்த்தப்பட்ட வாழ்வினை அர்த்தப்பட வேண்டிய வாழ்விற்குக் காட்டாகக்கூறி நெறிப்படுத்துபவை. அந்நிலையில் நீலகிரி படகர் இன மக்களின் இறப்புச் சடங்கு சார்ந்த “கரு ஹரசோது” எனும் பாவம் போக்கும் சடங்கில் இடம்பெறும் வாய்மொழி வழக்காறுகளில் நிலவும் சூழலியல் சிந்தனைகள் இம்மக்களின் சூழலியல் அறிவினையும், பாதுகாப்பினையும் புலப்படுத்துபவையாக அமைகின்றன.
படகர்களின் வாழ்வியல், வழிபாட்டு நிலையைவிட இறப்புச்சடங்கியலுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றது. மறுபிறப்பு மற்றும் பேய்களின் மீதும் நம்பிக்கையில்லாத இம்மக்கள் இம்மையுலகிலிருந்து பிரிந்துச் செல்கின்ற ஆன்மா மறுமையுலகத்தில் தம் முன்னோர்களுடன் உறைவதாக நம்புகின்றனர். இந்நிலையில் இம்மையுலகில் பிரியும் ஆன்மாவினையும், அவ் ஆன்மா உற்ற உடலையும் புனிதப்படுத்துவது இவர்களின் முக்கியமான இறப்பியல் சடங்காகும். அதனுள்ளும் இறந்த உடலினைக் கிழக்குநோக்கி கிடத்தி பாவம்போக்கும் ‘கரு ஹரசோது’ எனும் சடங்கு மிகவும் இன்றியமையானதாகும்.