“எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.“ இந்த வரிகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்! கடந்த வாரம் சிட்னியில் திடீரென மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் இறுதி நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி சிட்னியில் நடந்து முடிந்தபின்னர், நேற்று சிட்னியில் Hurstville என்ற பிரதேசத்தில், தனது மனைவி, பிள்ளைகள், மருமக்கள், மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் எங்கள் மூத்த கவிஞர் அம்பி அவர்களை பார்ப்பதற்குச்சென்றேன்.
அம்பிக்கு இன்று 17 ஆம் திகதி 91 வயது பிறக்கும் செய்தியறிவேன். இதனை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான எனது அருமைத்தம்பி கானா. பிரபா அவர்களிடம் சொன்னதும், தானும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னையும் அழைத்துச்சென்றார்.
அவர் முன்னேற்பாட்டுடன் வந்து என்னையும் அம்பியையும் கலந்துரையாடச்செய்து, எமது உரையாடலை ஒளிப்பதிவு செய்து காணொளியாக்கி இன்று அம்பியின் பிறந்த தின நாளிலேயே வெளியிட்டும்விட்டார். இந்த சந்திப்பும், காணொளியும் அம்பி எதிர்பார்த்திருக்காத ஒரு திடீர் நிகழ்வு.
கானா பிரபாவும் அம்பியுடன் கலந்துரையாடிவிட்டு, அம்பி குழந்தைகளுக்காக வண்ணப்படங்களுடன் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட கொஞ்சும் தமிழ் நூலின் பிரதியை, தனது குழந்தை இலக்கியாவுக்காக அம்பியின் கையொப்பத்துடன் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச்சென்றதன் பின்னர், மாலை 6.00 மணி வரையில் அம்பியுடன் இலக்கியப்புதினங்களை பரிமாரிக்கொண்டிருந்தபோது, சிட்னியில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் திருமதி கார்த்திகா கணேசர், செல்வி ஜெயசக்தி பத்மநாதன் ஆகியோரும் அம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவித்தனர்.
Continue Reading →