– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –
அத்தியாயம் ஒன்று: காட்சி : மிஸ்ஸிஸிபி பள்ளத்தாக்கு – காலம் : நாற்பதில் இருந்து ஐம்பது வருடங்கள் முன்பு
டாம் சாயரின் சாகசங்கள் என்ற பெயரில் உள்ள புத்தகத்தை நீங்கள் வாசித்திராவிடில், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. திரு. மார்க் ட்வைன் என்பாரால் அந்த புத்தகம் தயாரிக்கப்பட்டு இருந்தது. அவர் அதில் சத்தியத்தையே கூறி இருந்தார். சில விஷயங்களை அவர் கொஞ்சம் இழுத்துக்கொண்டு சொல்லி இருந்தபோதிலும் உண்மையையே முதன்மையாகக் கூறி இருந்தார். அது ஒன்றுமே இல்லை. போல்லி அத்தை, அந்த விதவை மற்றும் மேரி இவர்களை விடுத்து, ஒரு சமயம் இல்லாவிட்டாலும் இன்னொரு சமயம் பொய் சொல்லாமல் இருப்பவர்களை நான் கண்டதே கிடையாது. நான் முன்னமே உரைத்ததுபோல உண்மையை விளம்பும் அந்த புத்தகத்தில், கொஞ்சம் இழுவையுடன் அதிகம் சொல்லப்பட்டது போல்லி அத்தை, அதாவது டாமின் அத்தை போல்லி, மேரி, பிறகு டக்லசின் விதவை ஆகியோரைப் பற்றி மட்டுமே.
அந்த புத்தகம் கடைசியில் இவ்வாறாக முடிவடைகிறது. கொள்ளையர்கள் குகைக்குள் மறைத்து வைத்திருந்த செல்வத்தைக் கண்டுபிடித்த டாமும், நானும் செல்வந்தர்கள் ஆகிறோம். ஒவ்வொருவர் பங்கும் சேர்த்து, அத்தனையும் தங்கமாக ஆறாயிரம்டாலர்கள் எங்களுக்குக்கிடைக்கிறது. அவ்வளவு செல்வம் கொட்டி வைத்திருக்கும் அந்தக் காட்சி காணக்கிடையாத காட்சி. நல்லது!