நூல் அறிமுகம்: பிம்பச் சிறை – எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும் –

- முனைவர் பி.ஜோன்சன் -நூல்:  பிம்பச் சிறை – எம்.ஜி.ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும்
எழுத்தியவர்:  எம்.எஸ்.எஸ். பாண்டியன் (பூ.கொ. சரவணன்)

தமிழகத்தின் மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் அஇஅதிமுக-வினை நிறுவிய எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நூலே இது. The Image Trap: M G Ramachandran in Flims and Politics என்ற ஆங்கில நூலினைத் தமிழில் பூ.கொ. சரவணன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலின் முற்பகுதி எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையையும், அதன்மூலம் மக்களின் மனங்களில் அவர் எவ்வாறு பதிவானார் என்பதையும் காட்டுகிறது. பிற்பகுதியில் அவரின் அரசியல் பயணமும்,, அதிகார வர்க்கத்தின் தலைமையாக இருந்தும், மக்களின் பொதுபுத்தியில் ஏழைகளின் பங்காளனாக அவர் எவ்வாறு பரிணமித்தார் என்ற செய்தியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சாதிய ஒடுக்கத்திற்கு ஆளான மக்களின் வாழ்க்கையை நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய போக்கு, பிற்காலத்தில் திரைக்காவியங்களாக உருமாற்றம் பெறத்தொடங்கியது. அதில் வரும் கதைத்தலைவனான எம்.ஜி.ஆர். அவரின் உடைகளிலும், தான் ஏற்கும் பாத்திரங்களிலும் அதற்கேற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அவர் நடித்த பல திரைப்படங்களில், விவசாயி, தொழிலாளி, ஓட்டுநர், மீனவர், படித்த கிராமத்து ஏழை என இது போன்ற அடித்தட்டு மக்களின் மனங்கவர்ந்தவராகக் காட்சிப்படுத்தப்பட்டார். அவ்வாறு திரைக்கதை அமையவில்லை எனில், தானே அதனை அவ்வாறாக மாற்றியும் அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பாடல்களின் மூலமும் தன்னுடைய எண்ணங்களை வெளிக்கொணர்ந்தவர். தன்னுடைய உடல் கவர்ச்சியையும், தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இவைபோன்ற பலவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன (சில ஆய்வுகள் வெளிவராமல் கூட போயிருக்கின்றன).

திரையில் இவரின் பங்களிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய திமுக அதனை வைத்தே தன்னுடைய தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. இவருக்காகவே சில கதைகள் எழுதப்பட்டன. இவருடைய பல்வேறு படங்களில் திமுக-வினுடைய கொடியும், சின்னமும் காட்டப்பட்டன. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அஇஅதிமுக என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்ததும் திரைத்துறையின் மூலமே என்பது நினைவுகூரத்தக்கது. அரசின் எந்தவொரு திட்டமும் தொடங்கும்போது, அது ஏன் தொடங்கப்பட இருக்கிறது என்பதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மூலம் மக்களிடம் தெரிவிப்பது அவருடைய நடைமுறையாக இருந்தது (எடுத்துக் காட்டு: சத்துணவுத் திட்டம்).

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கொரோனோவும் கொலைகாரர்களும் – நீதியற்ற தேசத்தில் நாதியவற்றவர்களின் நிலை!

எழுத்தாளர்  முருகபூபதிகொரோனோ வைரஸின் உக்கிர தாண்டவத்திற்கு மத்தியில், இலங்கையில் ஒரு மரணதண்டனை கைதி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கு முன்பிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில், போதைவஸ்து குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பேன், எவர் தடுத்தாலும் நிறைவேற்றுவேன் எனச்சொல்லிக்கொண்டே இருந்தவர். மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

தற்போது இலங்கை சிறைகளில் நூற்றுக்கணக்கான மரணதண்டனைக்கைதிகளும் ஆயுள்கைதிகளும் இருக்கின்றனர். அவர்களில் பலர் கொலை, கூட்டு பாலியல் வன்முறை முதலான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களினால் மரணதண்டனை தீர்ப்புக்குள்ளாகியவர்கள். அவர்களில் இலங்கை பாதுகாப்புத்துறையைச்சேர்ந்த படையினரும் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ 2015 இற்கு முன்னர் பதவியிலிருந்த அரசில் பாதுகாப்புச்செயலாளராக இருந்தவர். அதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தென்மராட்சி மிருசுவிலில் ஐந்து வயது குழந்தை உட்பட எட்டுத்தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு, ஒரு வீட்டின் மலகூட குழியில் புதைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் நினைவூட்டவேண்டிய செய்திக்குறிப்பு பின்வருமாறு:

வடஇலங்கையில் நீடித்திருந்த போர்க்காலத்தின்போது தென்மராட்சியில் தமது வீடுகளை விட்டு வெளியேறிய சிலர் தமது வீடுகளை மீளச்சென்று பார்ப்பதற்காகச் சென்றனர். அவர்களின் வீடுகள் மிருசுவிலில் அமைந்திருந்தன. அவ்வாறு சென்றவர்களை, அங்கிருந்த இராணுவத்தினர் கைதுசெய்தனர். இச்சம்பவம் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நடந்திருப்பதாக அறியப்படுகிறது. அத்துடன் மறுநாள் கைதானவர்கள் எட்டுப்பேரும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இவர்கள் உடுப்பிட்டிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்றவர்கள். தாம் விட்டுவந்த உடைமைகளையும் வீடுகளையும் பார்க்கச்சென்றபோது, அங்கே அவர்கள் கண்ட காட்சியினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தப்பகுதியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அரைகுறையாக புதையுண்டிருந்ததை கண்டுவிட்டனர். இதுபற்றி, தமது குடும்ப உறவுகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர். மறுநாள் குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக சென்றவர்களை அங்கிருந்த இராணுவம் பிடித்துக்கொண்டது. அவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் காயங்களுடன் தப்பி வந்துள்ளார். ஏனையோர் எட்டுப் பேரும் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர். பலத்த காயங்களுடன் தப்பிவந்த பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் தமது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் வெளியே தெரிய வந்தது. அவர் வழங்கிய தகவலினால், படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. முதலில் காணப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை நீதிமன்றத்தினாலும் பொலிஸாரினாலும் இறுதிவரையில் கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது. யார் அந்த இளம் பெண்…? இன்னமும் மர்மம் தொடருகிறது!

Continue Reading →

நிலங்களை எழுதுதல் : உமையாழின் ‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவை’ சிறுகதைத்தொகுதி குறித்து—-

எழுத்தாளர் உமையாழ்‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவைநேற்றிரவு உமையாழின் சிறுகதைத்தொகுதியான ‘Cass அல்லது ஏற்கனவே சொல்லப்பட கதையில் சொல்லப்படாதவை’ படித்து முடித்தேன். இந்த Covid 19 வைரஸ் பரம்பலையிட்டு வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில் அச்சவுணர்வு கொஞ்சம் தலையெடுத்தாலும், பல்வேறுவிதமான நெருக்கடிகளிலும் இருந்து விடுபட்ட ஏகாந்த நிலையில் இது போன்ற நூல்களை வாசிப்பதென்பது ஒரு அலாதியான அனுபவம்தான். வாசித்து முடித்ததும் ஒரு உண்மை துலக்கமாகப் புலப்பட்டது. ஈழ- புகலிட சிறுகதையாசிரியர் வரிசையில் உமையாழ் தன்னையும் ஒரு சிறந்த சிறுகதையாளனாக இறுக்கமாகப் பிணைத்துக் கொள்கிறார். நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்ததொரு சிறுகதையாளன் கிடைத்துவிட்டான்.

இது உமையாழின் முதலாவது சிறுகதைத் தொகுதி. 9 சிறுகதைகள் அடங்கிய இந்தச் சிறுகதைத் தொகுதியை ‘யாவரும்’ பதிப்பகத்தினர் பல்வேறு எழுத்துப் பிழைகள் இருந்தாலும் மிக அழகாகவும் சிறப்பாகவும் வெளியிட்டுள்ளனர். இந்தச் சிறுகதைகளில் அநேகமானவை, இன்று நவீனத்தமிழ் இலக்கிய உலகில் வலம் வரும் பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும் ஏற்கனவே பிரசுரிமாகியிருந்தபடியால் அதற்குரிய அங்கீகாரத்தை அவை ஏற்கனவே பெற்று விட்டிருக்கின்றன.

“கடந்து வந்த நிலமெல்லாம் ஆச்சரியங்கள்தான். ஆகவே நிலங்களை எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது.” என்று தனது முன்னுரையில் கூறும் உமையாழ் தான் பிறந்து வளர்ந்த கிழக்கிழங்கையில் இருந்து, ஆறாண்டுகள் அலைந்து திரிந்த அரேபிய பாலைவங்கள் ஊடாக இன்று தான் வசிக்கின்ற பனி படர்ந்த நிலமாகிய பிரித்தானியா வரை பல்வேறு பிரதேசங்களிலும் தனது கதையின் களங்களை படர விட்டிருக்கிறார். வாழ்வும் வாழ்வுடன் தொடர்கின்ற அலைவுகளும் துயரங்களுமாக தொடர்கின்ற இக்கதைகள் வாழ்வு குறித்தும் வாழ்வின் அர்த்தங்கள் குறித்ததுமான விசாரணைகள் ஆக வெவ்வேறு அனுபவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Continue Reading →