ஒரு கேள்வி! ஒரு பதில்! இதழியல் ஆய்வு பற்றி…

எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றிய முகநூல் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மாலன் அவர்கள் பின்வருமாறு கேட்டிருந்தார்” இலங்கையின் இதழியல் வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.எத்தனை பெரும் ஆளுமைகள்! ஏன் நீங்களோ முருகபூபதியோ முயற்சிக்கக் கூடாது?”

அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்திருந்தேன்: “முருகபூபதியே பொருத்தமானவர். அவர் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளார். நூல்கள் பல எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலருடன் அதிகமாகப்பழகியுள்ளார். வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் அவர் பணியாற்றியதும் அதற்கு அவருக்கு உதவியாகவுள்ளது. அவரிடம் இது பற்றித்தெரிவிக்கின்றேன்.”

இது  பற்றி முருகபூபதி அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு முருகபூபதி அவர்கள் உடனடியாகவே பின்வருமாறு பதிலளித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

“அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  நீங்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும். இங்கு நாமும் வீட்டில்தான் முடங்கியிருக்கின்றோம்.  தங்களது அண்மைய இரண்டு பதிவுகள் (  காவலூர் ஜெகநாதன் – மல்லிகை ஜீவா ) படித்தேன். நல்ல பதிவு. தாமதிக்காமல், பிரான்ஸில் வதியும் ஈழநாடு ( டான் ரீவி)  குகநாதனுக்கும் ( காவலூர் ஜெகநாதனின் தம்பி ) அதனை பகிர்ந்துகொண்டேன்.

Continue Reading →

ஆய்வு: ஈழத்துப் பாடநூல் உரைமரபு

* 2020 தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கட்டுரை

அறிமுகம்

- கலாநிதி சுதர்சன் செல்லத்துரை -ஈழத்தில் வெளிவந்த உரைநூல்கள் தொடர்பான ஆய்வுகளை மீள்நோக்கும்போது, ‘ஈழத்தில் பாடநூல்சார் உரைமரபு’ ஒன்று வளமிக்கதாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஆனால், இம்மரபுமீது, ஆய்வுப்புலத்தின் கவனம் இதுவரை செல்லவில்லை. இதனை, ஈழத்து உரைமரபு தொடர்பாக ஆராய்ந்த, எஸ்.சிவலிங்கராஜா “ஈழத்துத் தமிழ் உரைமரபிலே பாடநூல் உரைமரபு இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.” (2010:iv) எனக் குறிப்பிடுகிறார். ஈழத்து இலக்கியப் பரப்பில் வித்துவான் வேந்தனாரைக் கவிஞராக முன்னிறுத்தி வெளிவந்த எழுத்துக்கள் அதிகமானவை. அவரது நூற்றாண்டு நிறைவுற்ற இக்காலத்தில், அவரது தமிழ்ப் பணியைக் கௌரவிக்குமுகமாக, அவரின் புலமைத்துவம் அதிகம் வெளிப்படும் பாடநூல் உரைகளை மையப்படுத்தி, பாடநூல் உரைமரபுசார்ந்த, வரலாற்றுநிலைப்பட்ட ஆய்வுக் குறிப்பொன்றை எழுதுவது அவசியமானதெனத் தெரிகிறது.

ஈழத்தின் மரபார்ந்த தமிழ்க் கல்வி மரபில் பாட நூல்களாக, பழந்தமிழ் உரைநூல்களைக் கற்றல் மற்றும் பழந்தமிழ் நூலுக்கு உரை எழுதுதல் என்பனவும் முதன்மை பெற்றிருந்தன. பின்னர், காலனிய எதிர்ப்புக் காலத்திலும் தேசியவாத காலத்திலும் உருவான புதிய கல்வி முறைக்கேற்ற பாட விதானம் (curriculum), பாட நூல், பாட வேளை, பாடப் பரீட்சை, பாட வகுப்பறை முதலியவற்றை முன்னிறுத்தி உருவான பாட நூல் உரைகள், ஈழத்துப் புலமைச் சூழலில் முதன்மை பெறத் தொடங்கின. அந்த உரைகள் ஆழமானதும் விரிவானதுமான ஆய்வுக்குரியவை. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்க் கல்வி மரபில் பாட நூலின் முக்கியத்துவம், பாட நூலாக உரையைக் கொள்ளுதல், பாட நூல் உரையின் முக்கியமான வரலாற்றுக் கட்டங்கள் முதலாயவற்றைச் சுருக்கமாக நோக்கி, வேந்தனாரின் பாட நூல் உரைகள்பற்றியும் அவரின் உரைத்திறன்பற்றியும் விரிவாக ஆராய இக் கட்டுரை முயல்கிறது. ஈழத்துப் பாட நூல் உரைமரபுசார்ந்த இந்த ஆய்வுக் குறிப்பு, முன்னோடி முயற்சி என்பதால் அறிமுகமாகவும் சுருக்கமாகவும் விடுபடல்கள் கொண்டதாகவும்கூட இருக்கலாம். ஒரு முன்வரைபு எனும் நிலையில் இத்துறைசார்ந்து விரிவாக ஆராய்வதற்கு இச்சிந்திப்பு முயற்சி வழிகோலும்.

இலங்கையில் பாட விதானம் – வரலாற்றுச் சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான காலனியப் பொருளாதார முறைமை, காலனிய காலத்திலும் அதற்குப்பின்னான காலத்திலும் பாட விதான உருவாக்கத்தில் பெருஞ் செல்வாக்குச் செலுத்தியது. காலனியம் உருவாக்கிய ஆட்சி மற்றும் நிர்வாக அலுவல்களின் தேவையைப் பூர்த்தி செய்வது பாட விதானத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. நாட்டை நிர்வகிப்பவர்களை உருவாக்கம் செய்வதிலும் நாட்டை இயக்குவதில் அவர்களின் பாத்திரத்தைத் தீர்மானிப்பதிலும் பாட விதானம் முக்கிய அச்சாகத் தொழிற்பட்டது. இலங்கையின் இற்றைக் காலக் கல்விமுறையின் கால்கோள் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டே ஆகும். 1900ஆம் ஆண்டில் இலங்கையில் பாட விதானம் ஒரு நியம அமைப்பைப் பெற்றதெனினும், காலனிய ஆட்சியின் நலன் பேணுதல் அதன் வெளித்தெரியா இலக்கு என்பது முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. நிர்வாகம், பண்பாடு மற்றும் சமயத் துறைகளுடன் தொடர்பானதாகவும் ஆங்கிலேயச் சாயல் பெற்றதாகவும் நூற் படிப்புக் கல்வி மற்றும் இலக்கியம் முதலியவற்றோடு தொடர்பானதாகவும் நகர்வாழ் மக்கள் அல்லது மத்தியதர வர்க்கத்தினருக்குரியதாகவும் – மத்தியதர வர்க்கமே பாட அமைப்பில் செல்வாக்குச் செலுத்துவதாகவும் இலங்கைப் பாட விதான உருவாக்கத்தின் ஆரம்பம் இருந்தமை அவதானிக்கத்தக்கது.

Continue Reading →

இலங்கைத்தமிழ் இலக்கியம்: தடம் பதித்த சிற்றிதழ்கள் – தீர்த்தக்கரை & நந்தலாலா

இலங்கைத்தமிழ் இலக்கியம்: தடம்  பதித்த சிற்றிதழ்கள் - தீர்த்தக்கரை & நந்தலாலாதீர்த்தக்கரை எண்பதுகளின் ஆரம்பத்தில் கண்டியிலிருந்து வெளியான சஞ்சிகை. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக்கொண்டு காலாண்டிதழாக வெளியான பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபேட் (இவர்தான் ‘புதியதோர் உலகம்’ எழுதிய ‘கோவிந்தன்’. ஏனைய புனைபெயர்கள்: ஜீவன், கேசவன். இயற்பெயர் சூசைப்பிள்ளை நோபேட். திருகோணமலையைச் சேர்ந்தவர்). . எம்.தியாகராம் & எல்.ஜோதிகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர். நூலகம் தளத்தில் 1980-1982 காலகட்டத்தில் வெளியான ‘தீர்த்தக்கரை’யின் ஐந்து இதழ்களுள்ளன. தீர்த்தக்கரை சஞ்சிகை மொத்தம் ஐந்து இதழ்களே வெளிவந்ததாக அறிகின்றேன். இதன் பின்னர் 1992 தொடக்கம் 2014 காலப்பகுதியில் அவ்வப்பொது தடை பட்ட நிலையில் ‘நந்தலாலா’ சஞ்சிகை காலாண்டிதழாக வெளியானது. ‘நந்தலாலா’வை வெளியிட்டது நந்தலாலா இலக்கிய வட்டம். ஆனால் தீர்த்தக்கரையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுபோல் நந்தலாலா சஞ்சிகையில் நந்தலாலா இலக்கிய வட்டத்தில் உள்ளவர்கள் யார் யார், நந்தலாலாவின் ஆசிரியர், ஆசிரியர் குழுவினர் யார் யார் என்பவை போன்ற விபரங்களைச் சஞ்சிகையில் காண முடியவில்லை. ஆனால் தீர்த்தக்கரை குழுவினரே நந்தலாலாவையும் வெளியிட்டனர் என்பதை ஊகிக்க முடிகின்றது.

தீர்த்தக்கரை, நந்தலாவா இரண்டுமே  இலங்கைத்தமிழ் இலக்கியப்பரப்பில் வெளியான சஞ்சிகைளில் முக்கியமானவை. இவற்றைக் கலை, இலக்கிய சஞ்சிகைகள்  என்று மேலோட்டமாகக் கூறிக் கடந்து விடமுடியாது. சமூக, அரசியல் விடயங்களைத் தாங்கி வெளியான கலை, இலக்கிய சஞ்சிகைகள் இவை. இவற்றை வெளியிட்டவர்களுக்குக் குறிப்பிட்ட அரசியல் பார்வை இருந்தது. மார்க்சியக் கண்ணோட்டத்தில் மக்களின் பிரச்சினையை அணுகினார்கள். அவ்வணுகளில் அவர்களுக்குத் தெளிவான பார்வையிருந்தது. இலங்கையின் மலையக மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள், இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், உலக அரசியல் இவை அனைத்தையுமே இவரகள் அணுகுவதில் இவர்கள் கொண்டிருந்த தெளிவான பார்வை சஞ்சிகைகளில் வெளியான படைப்புகள் எல்லாவற்றிலுமே புலப்படுகின்றன.

Continue Reading →