என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –
அத்தியாயம் நான்கு
நல்லது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் நிறைவுற்ற பின் தற்போது குளிர்காலத்தின் தொடக்கம். பெரும்பாலான சமயங்களில் நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் நான் சில வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துக் கூட்டி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். ஆறும் ஏழும் முப்பத்தாறு என்ற அளவில் பெருக்கல் வாய்ப்பாடும் என்னால் சொல்ல முடிந்தது. ஆனால் என் வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாலும், என்னால் அதற்கு மேல் போக முடியும் என்று தோணவில்லை. கணிதம் அந்த அளவுக்கு பயனுள்ளது என்று நான் கருதவில்லை.
முதலில் நான் பள்ளியை வெறுத்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது. எவ்வளவு அதிகமாக பள்ளிக்குச் செல்கிறேனோ, அவ்வளவு சுகமாக அது இருந்தது. அலுப்புத்தட்டும் வேளைகளில் ஹாக்கி