* 2020 தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கட்டுரை
அறிமுகம்
ஈழத்தில் வெளிவந்த உரைநூல்கள் தொடர்பான ஆய்வுகளை மீள்நோக்கும்போது, ‘ஈழத்தில் பாடநூல்சார் உரைமரபு’ ஒன்று வளமிக்கதாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஆனால், இம்மரபுமீது, ஆய்வுப்புலத்தின் கவனம் இதுவரை செல்லவில்லை. இதனை, ஈழத்து உரைமரபு தொடர்பாக ஆராய்ந்த, எஸ்.சிவலிங்கராஜா “ஈழத்துத் தமிழ் உரைமரபிலே பாடநூல் உரைமரபு இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.” (2010:iv) எனக் குறிப்பிடுகிறார். ஈழத்து இலக்கியப் பரப்பில் வித்துவான் வேந்தனாரைக் கவிஞராக முன்னிறுத்தி வெளிவந்த எழுத்துக்கள் அதிகமானவை. அவரது நூற்றாண்டு நிறைவுற்ற இக்காலத்தில், அவரது தமிழ்ப் பணியைக் கௌரவிக்குமுகமாக, அவரின் புலமைத்துவம் அதிகம் வெளிப்படும் பாடநூல் உரைகளை மையப்படுத்தி, பாடநூல் உரைமரபுசார்ந்த, வரலாற்றுநிலைப்பட்ட ஆய்வுக் குறிப்பொன்றை எழுதுவது அவசியமானதெனத் தெரிகிறது.
ஈழத்தின் மரபார்ந்த தமிழ்க் கல்வி மரபில் பாட நூல்களாக, பழந்தமிழ் உரைநூல்களைக் கற்றல் மற்றும் பழந்தமிழ் நூலுக்கு உரை எழுதுதல் என்பனவும் முதன்மை பெற்றிருந்தன. பின்னர், காலனிய எதிர்ப்புக் காலத்திலும் தேசியவாத காலத்திலும் உருவான புதிய கல்வி முறைக்கேற்ற பாட விதானம் (curriculum), பாட நூல், பாட வேளை, பாடப் பரீட்சை, பாட வகுப்பறை முதலியவற்றை முன்னிறுத்தி உருவான பாட நூல் உரைகள், ஈழத்துப் புலமைச் சூழலில் முதன்மை பெறத் தொடங்கின. அந்த உரைகள் ஆழமானதும் விரிவானதுமான ஆய்வுக்குரியவை. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்க் கல்வி மரபில் பாட நூலின் முக்கியத்துவம், பாட நூலாக உரையைக் கொள்ளுதல், பாட நூல் உரையின் முக்கியமான வரலாற்றுக் கட்டங்கள் முதலாயவற்றைச் சுருக்கமாக நோக்கி, வேந்தனாரின் பாட நூல் உரைகள்பற்றியும் அவரின் உரைத்திறன்பற்றியும் விரிவாக ஆராய இக் கட்டுரை முயல்கிறது. ஈழத்துப் பாட நூல் உரைமரபுசார்ந்த இந்த ஆய்வுக் குறிப்பு, முன்னோடி முயற்சி என்பதால் அறிமுகமாகவும் சுருக்கமாகவும் விடுபடல்கள் கொண்டதாகவும்கூட இருக்கலாம். ஒரு முன்வரைபு எனும் நிலையில் இத்துறைசார்ந்து விரிவாக ஆராய்வதற்கு இச்சிந்திப்பு முயற்சி வழிகோலும்.
இலங்கையில் பாட விதானம் – வரலாற்றுச் சுருக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான காலனியப் பொருளாதார முறைமை, காலனிய காலத்திலும் அதற்குப்பின்னான காலத்திலும் பாட விதான உருவாக்கத்தில் பெருஞ் செல்வாக்குச் செலுத்தியது. காலனியம் உருவாக்கிய ஆட்சி மற்றும் நிர்வாக அலுவல்களின் தேவையைப் பூர்த்தி செய்வது பாட விதானத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. நாட்டை நிர்வகிப்பவர்களை உருவாக்கம் செய்வதிலும் நாட்டை இயக்குவதில் அவர்களின் பாத்திரத்தைத் தீர்மானிப்பதிலும் பாட விதானம் முக்கிய அச்சாகத் தொழிற்பட்டது. இலங்கையின் இற்றைக் காலக் கல்விமுறையின் கால்கோள் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டே ஆகும். 1900ஆம் ஆண்டில் இலங்கையில் பாட விதானம் ஒரு நியம அமைப்பைப் பெற்றதெனினும், காலனிய ஆட்சியின் நலன் பேணுதல் அதன் வெளித்தெரியா இலக்கு என்பது முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. நிர்வாகம், பண்பாடு மற்றும் சமயத் துறைகளுடன் தொடர்பானதாகவும் ஆங்கிலேயச் சாயல் பெற்றதாகவும் நூற் படிப்புக் கல்வி மற்றும் இலக்கியம் முதலியவற்றோடு தொடர்பானதாகவும் நகர்வாழ் மக்கள் அல்லது மத்தியதர வர்க்கத்தினருக்குரியதாகவும் – மத்தியதர வர்க்கமே பாட அமைப்பில் செல்வாக்குச் செலுத்துவதாகவும் இலங்கைப் பாட விதான உருவாக்கத்தின் ஆரம்பம் இருந்தமை அவதானிக்கத்தக்கது.
Continue Reading →