என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் பன்னிரண்டு
விசித்திரமான முறையில் தோணி மெதுவாய் நகர்ந்தது கடைசியாக அந்தத் தீவைத்தாண்டும் வேளை நள்ளிரவு மணி ஒன்று இருக்கக்கூடும். ஏதேனும் படகு எதிரில் வந்தால் உடனடியாகத் தோணியிலிருந்து வெளியே நதிக்குள் குதித்துத் தப்பிப்பதுடன், முன்பு போட்டத் திட்டத்தின் படி இல்லினோய் கரையை அடைவதைக் கைவிடுவது என்று நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம். நல்ல வேளை! எந்தப் படகும் எதிரில் வரவில்லை. புறப்படும் அவசரத்தில் துப்பாக்கி, மீன்பிடிக்கும் வலை அல்லது சாப்பிட ஏதேனும் எடுத்து வைப்பதைப் பற்றி நாங்கள் இருவருமே சிந்திக்கவே இல்லை. எங்களுக்கு இருந்த பதற்றத்தில் அந்தப் பொருட்களைப் பற்றி யோசிக்கவே தோன்றவில்லை. உண்மையில் உயிர் தப்பிப் பிழைக்கும் போது எல்லாவற்றையும் எடுத்து தோணியில் திணிப்பது என்பது நல்லதொரு நியாயம் இல்லை.
அந்த மனிதர்கள் அங்கே சென்றால் நான் மூட்டி வைத்திருக்கும் அந்தத் தீயைக் காண்பார்கள் என்பது எனது கணிப்பு. இரவு முழுதும் அவர்கள் அங்கேயே அமர்ந்து, வெளியே சென்றிருக்கும் ஜிம் திரும்பி வரக் காத்திருக்கக் கூடும். நல்லது. காரணம் எதுவாகினும், அவர்கள் எங்களை விட்டு வெகு தொலைவில் இருப்பது நல்லதுதான். அவர்களை திசைதிருப்ப நான் மூட்டிய பொய்யான தீ அவர்களை முட்டாளாக்கவில்லை என்றாலும் நான் முயற்சியே செய்யவில்லை என்று யாரும் கூறமுடியாது அல்லவா! என்னால் என்ன செய்து அவர்களை முட்டாளாக்க முடியுமோ அதை நான் கண்டிப்பாகச் செய்தேன்.
அடிவானத்திலிருந்து சூரியனின் முதல்கதிர்கள் வெளியே நீண்டபோது, இல்லினோய் பகுதியில் நீண்டதொரு வளைவுடைய மிஸ்ஸிஸிசிப்பி நதியின் ஊடே அடர்ந்த பஞ்சுப்பொதி மரங்கள் சூழ்ந்த மணல் மேடு உடைய சிறு தீவில் எங்களின் தோணியைக் கட்டி வைத்தோம். பஞ்சுப்பொதி மரங்களின் கிளைகளை சிறிய கோடரி கொண்டு தறித்தெடுத்து, எங்களின் தோணி மீது முழுதும் வைத்து நன்கு மூடி நதிக்கரையில் உள்ள சிறிய குகை போலத் தோன்றுமாறு செய்தோம்.
நதியின் மிஸ்ஸோரி பகுதிக் கரை முழுதும் மலைகளும், இல்லினோய் பகுதி மொத்தமும் அடர்ந்த வனமும் என்ற வகையான அமைப்பு இயற்கையிலேயே அங்கே காணப்படும். மிஸ்ஸோரிக் கரையைச் சுற்றிவர அகன்ற வாய்க்கால் அங்கே உள்ளதால் எங்களை நோக்கி யாரேனும் வந்துவிடுவார்கள் என்ற பயமில்லாமல் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஓய்வாக அங்கே சாய்ந்து கொண்டு மிஸ்ஸோரி நதிக்கரையோரம் மிதக்கும் மரக்கலங்களையும், நீராவிப் படகுகளையும் முழு நாளும் பார்த்துக் கொண்டே இருந்தோம். இன்னும் சில நீராவிப்படகுகள் நதியின் மத்தியில் நீரின் விசையோடு போட்டியிட்டுக்கொண்டு இரைச்சலுடன் மெதுவாய் நகர முயற்சிப்பதையும் கண்டுகொண்டிருந்தோம்.