தற்காலத்தில் கொரோனா என்ற நாமத்தை முழு உலகமும் சுமந்துகொண்டிருக்கிறது! அதே சமயம் அகதி என்ற நாமத்தை சுமந்துகொண்டிருப்பவர்கள் உலகெங்கும் நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றனர். இரண்டு நாமங்களும் மறையவேண்டும். எனினும், உலக அரங்கில் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத தடங்களாகவே அவை இரண்டும் நிலைகொண்டிருக்கும். பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளைப்பார்த்து அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் , அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி இதுவரையில் எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு படகுகளில் வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார். அவருடைய உயிர்வாசம் என்ற புதிய நாவல், ஏறக்குறைய ஐநூறு பக்கங்களுக்கும் மேல் விரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான் இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும் நாம் நுகரும் வாசம்! காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை! இவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில் இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில் எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள் கதைகளை கேட்டு பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள் பற்றிய செய்திகளையும் கடந்து வந்திருக்கின்றோம்.