இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய நண்பர்களிடம் ரகுநாதன் குறித்தும் விசாரிக்கத்தவறுவதில்லை. காரணம், அவர் கடந்த சிலவருடங்களாக சிறுநீரக உபாதையினால் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று வந்துகொண்டிருந்தவர். கடந்த சில நாட்களாக நான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருந்த நண்பர் ரகுநாதனும் தற்போது நிரந்தரமாக நினைவுகளாகிவிட்டார் என்பதை கனத்த மனதுடன் உள்வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை எழுதுகின்றேன்.
அன்றைய தினம் எம்முடன் மனோகரனின் நண்பர் ஶ்ரீபாஸ்கரனும் உடன்வந்தார். அன்று, ரகுநாதன் எம்மைக்கண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் தான் சம்பந்தப்பட்ட நிர்மலா, தெய்வம் தந்த வீடு முதலான திரைப்படங்களில் ஒலித்த பாடல்களை பாடத்தொடங்கிவிட்டார். நண்பர்களைக்கண்டதும் அவர் உற்சாகமுற்றார். அவுஸ்திரேலியா சிட்னியில் கவிஞர் அம்பியின் 90 வயது விழா நடக்கவிருப்பது பற்றிச்சொன்னதும், பல விடயங்களை நனவிடை தோய்ந்தார். சிறுநீரக சிகிச்சைக்காக அடிக்கடி அவர் மருத்துவமனை சென்று வருகிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். நண்பர்களைக்கண்டதும் அவருக்கு வந்த உற்சாகத்தை எவ்வாறு வர்ணிப்பது? முதுமையிலும் தனிமையிலும் இருப்பவர்களுக்கு நண்பர்களின் சந்திப்புத்தான் சிறந்த ஊக்கமாத்திரை! அண்மையில் நான் எழுதிய உள்ளார்ந்த ஆற்றலுக்கு முதுமை தடையில்லை என்ற ஆக்கத்திலும் நண்பர் ரகுநாதன் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதனை அவர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. இலங்கையில் தமிழ் சினிமா, நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட ரகுநாதன், புகலிடத்திலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர். வயதும் மூப்பினால் வரும் பிணிகளும் அவரை முடங்கியிருக்கச்செய்தாலும், நினைவாற்றலுடன் பல சம்பவங்களை அன்றைய தினம் நினைவுகூர்ந்தார். அவரது நெருங்கிய நண்பர் கவிஞர் அம்பியின் 90 விழா மலருக்கும் அவர் ஒரு ஆக்கம் எழுதியதும் அவரது துணைவியாரின் துணையினால் என்பதை பின்னர்தான் அறிந்தேன்.
கலைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ரகுநாதன், கொழும்பில் ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் பணியிலிருந்தார். ஒரு நாள் மதியம் நண்பர் மு.கனகராஜன் என்னையும் அழைத்துக்கொண்டு ரகுநாதனிடம் வந்தார். அங்கே கலைஞர் டீன்குமாரும் இன்னும் சிலரும் அச்சமயம் இலங்கையில் வெளியான ஒரு தமிழ்த்திரைப்படக்காட்சிகள் தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கே டீன்குமார்தான் அதிகமாகப்பேசினார். குறிப்பிட்ட படத்தைப்பற்றிய தமது கடுமையான விமர்சனங்களை மிகவும் கேலியாக முன்வைத்துக்கொண்டிருந்தார்.
Continue Reading →