– நூல்: ‘நீண்ட காத்திருப்பு’ (A Long Watch) – ஆங்கிலத்தில்: அஜித் போயகொட | தமிழில்: தேவா – வெளியீடு: வடலி பதிப்பகம் –
“சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம்.” கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான். இலங்கைத் தீவினைச்சுற்றியிருந்த இந்து மகா சமுத்திரத்தில் ஊர்ந்தும் விரைந்தும்கொண்டிருந்த சாகரவர்த்தனா கப்பல் பற்றி அறிந்திருப்பீர்கள். அது மன்னார் கடல் பரப்பில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பாரிய சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் வசமும் மன அழுத்தங்களுடன் சில வருடங்கள் வாழ்ந்திருக்கும் இவர், விடுதலையாகி வந்தபின்னரும் இலங்கை அரசின் பாராமுகத்தினாலும் புறக்கணிப்புகளினாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தவர். அனைத்து அழுத்தங்களிலுமிருந்து விடுதலை பெறவேண்டுமானால், அந்த அழுத்தங்களினால் பெற்ற அனுபவங்களை பதிவு செய்யவேண்டும். அதனால், நீண்ட மௌனத்தின் பின்னர் அஜித் போயாகொட மனம் திறக்கிறார். அவர் சொல்லச்சொல்ல கேட்டு எழுதுகிறார் சுனிலா கலப்பதி.
A Long Watch என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நூலின் தமிழாக்கமே நீண்ட காத்திருப்பு. தமிழில் வரவாக்கியவர் தேவா. இந்நூலை வடலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேவா, சிறந்த மொழிபெயர்ப்பாளர். ஏற்கனேவே இவர் மொழிபெயர்த்த குழந்தைப்போராளி ( சைனா கெய்ரெட்சி எழுதியது ) நூல் பற்றியும் எனது படித்தோம் சொல்கின்றோம் தொடரில் எழுதியிருக்கின்றேன். நீண்ட காத்திருப்பு நூலை மொழிபெயர்க்கும் பணியில் தேவாவுடன் இணைந்திருந்தவர்களும் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளரின் பதிவு, இவ்வாறு தொடங்குகிறது. இந்த நூலின் பதிப்புரையின் தொடக்க வரிகளை இங்கு அவசியம் கருதி பதிவுசெய்கின்றோம்:
அறுபதுகளில் யுத்த எதிர்ப்புப் பாடலொன்றில் சர்வதேச இராணுவ சிப்பாய்கள் குறித்து பூர்விகக்குடி பாடகி பஃபி செயின்ற் மேரி (Buffy Sainte-Marie) இவ்வாறு பாடுவார்: “ தனதுடலை ஆயுதமாய் யுத்தத்துக்கு தருகிறவன் எவனோ, அவனில்லையேல் எவராலும் எங்கும் எந்தப்போரையும் நடத்திட இயலாது. “ போரில் ‘ இது இப்படித்தான் ‘ ‘போராட்டங்களில் இவை சகஜம் ‘ என்றெல்லாம் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மத்தியில் ( Apologists of War Crimes) தனிநபரது பொறுப்பினைத்தான் ( Individual Responsibility ) அப்பாடலில் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டிருப்பார். அரசாங்கங்களின் திட்டங்களைக் கொண்டு செல்வதில் அதன் ஊழியருக்குப் பெரும் பங்குண்டு. அதிகாரங்களுக்குச் சிப்பாய்கள் வெறும் கருவிகளே என்கிறபோதும் எல்லாக் கருவிகளும் கட்டளையை அப்படியே பின்பற்றுபவை அல்ல. சிப்பாய்களதும் அரசாங்கத்தின் கருத்தியலும் அதன் பெரும்பான்மை சமூகங்களின் கருத்தியலுடன் ஒத்துப்போவதாலேயே சிறுபான்மைச் சமூகங்கள் மீதான வன்முறை உலகமெங்கிலும் என்றும் தொடருதல் சாத்தியப்படுகிறது.
அஜித் போயாகொட , மத்திய இலங்கையில் கண்டியில் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கடற்படையினரை தனது இளம்பராயத்தில் அங்கு அரிதாகவே கண்டிருப்பவர். சிறிய பராயத்தில் ஒரு மகா நாயக்கதேரரின் இறுதி ஊர்வலத்தில்தான் அவர் கடற்படையினரின் சீருடையை முதல் முதலில் பார்த்திருக்கிறார்.