‘Literature is what a man does in his loneliness – Dr. S. Radhakrishnan
‘இலக்கியம் ஒரு மனிதன் தன் தனிமையில் கொள்ளும் ஈடுபாடு’ – 1956-லோ என்னவோ அகாதமிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன் –
எனக்கும் சாஹித்ய அல்லது எந்த அகாடமிகளுக்குமே (நிறுவனமாகி பூதாகரித்து முன் நிற்கும் இலக்கியத்துக்கும்) என்ன சம்பந்தம்?. ஒரு சம்பந்தமும் இல்லையென்று தான் நான் தில்லியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து (1956 டிஸம்பர் 29 ) தோன்றியது. சாஹித்ய அகாடமி இருப்பது ஒரு அழகான கட்டிடத்தில். அந்த கட்டிடத்தை நிர்மாணித்தவர் ரஹ்மான் என்னும் ஒரு கட்டிட கலைஞர்.. இந்திராணி ரஹ்மான் என்னும் அன்று புகழ்பெற்றிருந்த நடனமணியின் கணவர். வாசலில் ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் சிலை வரவேற்கும், மிக அழகான கம்பீரமான தோற்றம் கொண்டது அந்த சிலை. எழுத்தாளன் என்றாலே ஒரு பஞ்சபரதேசி உருவம் நம் கண்முன் நிற்குமே. அப்படி அல்ல. ஏழு வீதிகள் பிரியும் ஒரு போக்குவரத்து வட்டத் தீவினைப் பார்த்து நிற்கும். கட்டிடத்தின் பெயர் ரவீந்திர பவன். உள்ளே நுழைந்ததும் தலைகுனிந்து இருக்கும் தாகூரின் மார்பளவுச் சிலை ஒன்றைப் பார்க்கலாம். வேத காலத்து ரிஷிபோல. அக்காலத்தில் கவிகளும் ரிஷிகளாகத் தான் இருந்தார்கள். வால்மீகி, வியாசர், அதனால் தானோ என்னவோ வள்ளுவருக்கும் ஒரு ரிஷித் தோற்றம் கொடுத்து இருக்கிறோம். எல்லாம் அழகானவைதான். மூன்று காரியா லயங்களை அது உள்ளடக்கியது. லலித்கலை, சாஹித்யம் பின் சங்கீதமும் நாடகமும். எல்லாம் ஒன்றேயான தரிசனத்தின் மூன்று தோற்றங்கள் என்ற சிந்தனையை உள்ளடக்கியது போல். ஆனால், உள்ளே நடமாடியவர்களுக்கு அது பற்றிய பிரக்ஞை இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவர் மற்றவரோடு சந்தித்துப் பேசி நான் பார்த்ததில்லை. காண்டீனைத் தவிர என்று சொல்ல வேண்டும்.