(தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர். அன்னாரது 115 ஆண்டு பிறந்த நாள் நினைவாக இக் கட்டுரை வெளியாகிறது)
தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 3 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம். தொடக்கப் புள்ளியில் மீண்டும் வந்து நிற்கிறோம். சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவால் கொண்டு வந்து நிறேவேற்றப்பட்ட 18 ஆம் இலக்கக் குடியுரிமை சட்டம் அதே ஆண்டு நொவெம்பர் மாதம் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்து வாக்களித்தவர். அப்போது தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். அதன் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார். 1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் அய்க்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,000 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றி பெற்றவர் பொன்னம்பலம். “கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது. ஆனால் 1948 இல் அதே அய்க்கிய கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயக்காவோடு அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசினார். பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப் படவில்லை. அவர்களது வாக்குரிமை பறிபோவதைப் பற்றி அவர் எண்ணிப்பார்க்கவில்லை. தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டி.எஸ. சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.