தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், தமிழ் சினிமாவுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறது. ஒரு தமிழனுக்கு தன் இயல்பில் பேச, வாழ, வரிவிலக்கு என்ற ஆசை காட்ட வேண்டுமென்றால், தமிழ் வாழ்க்கை தன் இயல்பில் இல்லாத ஒரு போலியைத் தானே ஃபாஷனாகக் கொண்டு வாழ்கிறது என்று அர்த்தம்? அதுவும் தமிழினத் தலைவர் ஆட்சி நடக்கும் போது?. ஒரு நீண்ட காலமாக தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் தமிழ் பேசும் கதாநாயகியைத் தேடும் முயற்சி ஒரு தொடராக வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் பெயர்கள் இப்போது ஃபாஷனில் இல்லை. தன் தமிழ்ப் பற்றை உலகுக்கு பறை சாற்றும் நோக்கில், ஒரு காலத்தில் தம் பெயரையே ஒரு மாதிரியாக தமிழ்ப் பெயர்களாக மாற்றி வந்தார்கள் நம்மில் பலர். தமிழ்ப்பெயர் என்றால் அது சங்க காலத்தில் புழங்கிய பெயர்களாக இருக்கவேண்டும் என்பது சொல்லப்படாத விதி. ஆனால் இப்போது ஸ்ரேயா, நமீதா, ;பூஜா, அபூ, தமன்னா, டாப்ஸி, ஹன்சிகா மோட்வானி அனூஷ்கா, ரீமா சென், குஷ்பு, ஆண்ட்ரியா என்ற பெயர்களில், தமிழ் தெரியாத வடநாட்டு நங்கைகளிடம் தான் நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி. தமிழ் நடிகர்கள் பெயர்கள் கூட இப்போது ரொம்ப ஃபாஷனோடு, பரத், அஜீத், தனுஷ், விஜய் காந்த், ஸ்ரீகாந்த் இப்படித்தான் யாரையும் குறை சொல்லிப்பயனில்லை. பேச்சில் தான் தமிழ்ப்பற்று இருந்ததே தவிர, உள் மனசு என்னவோ முற்றிலும் வேறாகத் தான் ஆசை கொண்டிருந்தது.