தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1949 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன் அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும்? அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.
சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் அவற்றிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அந்த நோக்கோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்குழுக்கூட்ட அறையில் நடந்தது. டொக்ரர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கினை வீரகேசரி வாரப்பதிப்பின் முன்னாள் ஆசிரியர் வி. தேவராஜ், திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம, கொடகே பதிப்பக அதிபர்சுமணஸ்ரீ கொடகே, டான் (தமிழ் ஒளி) தொலைக்காட்சியின் பணிப்பாளர் ‘ பாரிஸ் ஈழநாடு’குகநாதன் உள்ளிட்ட பலர் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து எழுத்தாளர் திக்குவல்லை கமால் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார். இதனையடுத்து, நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்களமொழிபெயர்ப்பு சமணல வௌ பற்றிய அறிமுகத்தை ஊடகவியலாளர் கலாநிதி ஹேமசிறி குருப்பு நிகழ்த்தினார். இந்த நாவலை பிரபல மொழிபெயர்ப்பாளர் மடுளுகிரிய விஜேரத்ன மொழிபெயர்த்திருந்தார். அவரே இதனை பதிப்பித்து வெளியிட்டிருந்தார். ஏற்கனவே இந்த நாவல் ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகி பரந்த அறிமுகத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.