இந்த மாலைப்பொழுது மிக இனியதாக இருக்கிறது. இப்பொழுது இம் மேடையில் நிற்பது அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டும் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களை விட, பாராட்டப் புறப்பட்ட நான் களிப்பில் மிதந்து நிற்கிறேன். பாராட்டுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பது மட்டும் காரணமல்ல. ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு பாராட்டுரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பானது நோயாடும், சீழோடும்; பிணியோடும் நிதம் கலந்தலையும் எனக்கு, பூவோடு கூடிய நார்போன்று, இவர் அருகே நிற்பதே பெருமை வீச்சதை தருகிறது. இந்த வாய்ப்பைத் தந்த தகவம் அமைப்பினருக்கு நன்றி. எழுத்துலகில் அவர் சாதாரணர் அல்ல. பூனையையும் எலியையும் வழுக வழுகப் பிடித்துவிட்டு இமயமலை உச்சியில் ஏறிநின்று, மார்தட்டி, கைஉயர்த்தி இருவிரல் சுட்டி, அது தன் வெற்றியெனத் தாமே பறைசாற்றுபவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர். அத்தகையோர் பலர் எழுத்துலகில் இருக்கிறார்கள். காலத்திற்கும் தருணத்திற்கு ஏற்ப குயளவ குழழன போலக் கதைகட்டிச் சுடச்சுடப் பரிமாறும் எழுத்தாளர்கள் அவர்கள். இவர் அவற்றில் சேர்த்தியல்ல. அனுபவங்களோடு கூடியவை இவரது படைப்புகள். இரை மீட்டி, மீள மீள அரைத்து, மனத்தில் செரிமானமான பின் எழுத்தில் வந்து யதார்த்தமாக வீழ்பவை.