அத்தியாயம் ஒன்று: முதலிரவு!
ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம். எமிலிசோலாவின் நாவலான ‘நானா’வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் ‘நானா’ சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் ‘முதலிரவு’ என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் ‘போலிஸ்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார். ‘நானா’ பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.