மீண்டும் வாசிக்கையில் தெணியானின் “காத்திருப்பு”

மீண்டும் வாசிக்கையில் தெணியானின் "காத்திருப்பு"எழுத்தாளர் தெணியான்‘காத்திருப்பு’ என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக்  குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும்,  மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த ‘அபிதா’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று.  இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.

Continue Reading →

‘சிதைவுகளோ’டு ‘தேம்பி அழாதே பாப்பா’

ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு இந் நாவல்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்த எழுத்துக்களை, அவை சொல்லவரும் அதே உணர்வுகளோடு புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் 'சினுவா ஆச்சுபி'யின் 'சிதைவுகளை' தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் என்.கே. மகாலிங்கம், 'கூகி வா தியாங்கோ'வின் 'தேம்பி அழாதே பாப்பா'வை தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஆகியோரை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது….அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். ‘நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.

முதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.

Continue Reading →