தமிழகம்: இனத்தையும் பண்பாட்டையும் காப்பது தாய்மொழியே. உலகத் தாய்மொழி தின விழாவில் பேச்சு!

தமிழகம்: இனத்தையும் பண்பாட்டையும் காப்பது தாய்மொழியே. உலகத் தாய்மொழி தின விழாவில் பேச்சு!வந்தவாசி.பிப்.18.  வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழாவில், ஒரு இனத்தையும் அதன் பண்பாட்டையும் அழிந்து விடாமல் காப்பதில் அந்த இனத்தின் தாய்மொழியே முக்கிய பங்காற்றுகிறது என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். வாசகர் வட்டத் துணைத் தலைவர் க.சண்முகம், பெ.பார்த்திபன், பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ‘தாய்மொழியாம் தமிழ்மொழியில் கையெழுத்திடுவோம்’ இயக்கத்தை தமிழில் கையெழுத்திட்டு, வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் ம.சு.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, தாயைப் போற்றி பாதுகாக்காத சமூகமும், தாய் மொழியைக் கொண்டாடாத இனமும் முன்னேற முடியாது என்று பேசினார். மூத்தத் தமிழறிஞருக்கான பாராட்டு மேனாள் தமிழாசிரியர் க.கோவிந்தனுக்கு செய்யப்பட்டது.

Continue Reading →

திருக்குறளும் உரை ஆசிரியர்களும்

திருக்குறளும் உரை ஆசிரியர்களும்இருபதாம் நூற்றாண்டில்  திருக்குறள் பற்றிய ஆய்வில்   பெரும் புரட்சி ஏற்பட்டது. குறள் பற்றி நூற்றுக்கும் மேலான  நூல்கள்  வெளிவந்தன. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பட்டது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர்.  திருக்குறளுக்குப் பல சிறப்புக்கள் இருக்கின்றன. இந்த சிறப்புக்கள் காரணமாகவே திருக்குறள் காலம் தோறும் கற்றோரால் போற்றி வரப்பட்டுள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல்.  அதில் அய்ம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.  திருக்குறளின் முதல் பெயர்  முப்பால். பின்னால் வந்தவர்களே அதன் ஆசிரியரின் பெயரை நூலுக்கு வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குறளும்  இரண்டு அடிகள்,  ஏழு சீர் களைக்  கொண்டது. திருக்குறளில்  இடம்பெறாத இரு சொற்கள்     –     தமிழ், கடவுள். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்  –   மணக்குடவர்.  முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்   –    ஜி.யு. போப். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு.  திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை  பத்தாவது.  மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 7

எகிப்தில் சில நாட்கள் 6ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்றில் சுதேச மன்னர்கள் ஆண்டகாலத்தை பழைய , மத்திய, பிற்காலம் என மூன்றாக வகுத்திருக்கிறார்கள் எகிப்திய வரலாற்று ஆசிரியர்கள். அத்துடன் இடைப்பட்ட காலங்களில் எகிப்து நலிவடைந்த வேளையில் வேற்று நாட்டவர்கள் ஆண்டிருப்பது பற்றி ய குறிப்புகள் சரித்திரத்தில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். சாதாரண மனிதர்கள் போல் வெற்றிகளை கொண்டாடுவதும் தோல்விகளை மறைக்க நினைப்பதுமான போக்கு எகிப்திய அரசவம்சத்தில் இருந்ததால் நலிவடைந்த காலங்களை அறிவதற்கு இலக்கியங்களைத் தேடி அறிய வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

Continue Reading →

நினைவேற்றம்

 -தேவகாந்தன்-   (முன்மொழிவு: கதி மாற்றமற்ற காலத்தின் சீரான நகர்ச்சியில் சந்தோஷங்களுடனும், துக்கங்களுடனுமான மனித வாழ்க்கைமட்டும்தான் ஊர்வதாகவோ பறப்பதாகவோ தோற்றம் காட்டி நிற்கிறது. வாழ்வை வாழ்வதற்கும், கழிப்பதற்குமான எல்லைக்கோடுகள் வேறுவேறானவையாகவே இருக்கின்றன. வாழ்ந்தேனா, கழித்தேனா என்ற கேள்விகளுக்கப்பால் எல்லைக்கோடுகளின் விதித்தல்பற்றியே நிறைய நான் சிந்தித்திருக்கிறேன். பதில் கிடைத்த அப்போதும்  எல்லைக்கோடுகள் தாண்டமுடியாதவையாகவே இருந்திருக்கின்றன. இவை பல வேளைகளில் விண்டுரைக்க முடியாத விரக்தியின் உச்சம்நோக்கி என்னை நகர்த்தியிருக்கின்றன. மன விரக்திகள் மிக மோசமாக அழுத்துகிறபோது  சமூகத்தின்மீதான கோபமாகவும், அதன் பிரதிநிதிகளாய் நின்று வாதித்து என்னை உபாதிக்கும் குடும்பத்தினருடனான ஒட்டுவிடுதலாகவும் அது பரிணமித்து என்னை எங்கோ எங்கோ தொலைத்துவிடுகிற சந்தர்ப்பங்கள் எனக்குப் பல்வேறு தடவைகளில் நேர்ந்திருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களிலும் கவுதமனுக்கு ஒரு திரிமாபோல, எனக்கு ரோஸ்களும், தயாவதிகளும், எமிகளும் இருக்கவே செய்திருக்கிறார்கள். இத்தகு கணங்கள் மிகப் பெருமைப்பட முடியாதவையாக இருந்தபோதும், என் வாழ்வின் ஒரு பகுதியாக எனக்கு இவற்றில் அக்கறையுண்டு. ஆயினும், இவை என் யோசிப்பின் காலப் பரப்பு அடக்காத விஷயங்கள். இலங்கையிலோ, தமிழகத்திலோ என்னைத் தொலைத்துவிடுவதற்கான நிலைமைகள் முதிர்ந்தபோது மிக அநாயாசமாக அவற்றைச் செய்துவிட என்னால் முடிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறான நிலைமைகள் என் புதிய நாடான கனடாவில் விளைந்த சமயங்களில் காலநிலையும், தொடர்பூடகச் சாதனங்களும் காரணமாய் செயற்படுத்தவியலாத நிலை உருவாயிற்று. அண்மையில் அவ்வாறான ஒரு மனவழுத்தம் திரண்ட சமயத்தில் ஒரு விச்சிராந்திபோல் வானும், நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், மண்ணும், மரங்களும்கூட பார்வையில் படமுடியாத நிலக்கீழ் வீட்டிலிருந்து, கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகவளவிலான பனிப் பொழிவாலும், குளிர் அடர்த்தியாலும், உறைபனியாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு பருவகால செறிநிலையில் என் அவத்தை குறையும்படியாக என் வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அதீத முயற்சியில் ஈடுபட முயன்றிருந்தேன். யோசிக்க யோசிக்க எனக்கு விடைகளுக்குப் பதிலாக புதிர்களே கிளர்ந்தெழுந்ததாய்த் தோன்றியது. இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் மாறுகொள வாழ்ந்த வாழ்வு ஒரு வெறுமையாய் வந்து என்னைக் கவிந்தது. திட்டமிடாவிட்டாலும்  வித்தியாசங்களூடாக இழுத்துக்கொண்டு செல்லப்பட்ட வாழ்க்கையில் இது தவிர்க்கப்பட முடியாதது என்றே ஆரம்பத்தில் கணித்தேன்.

Continue Reading →

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்சுப்ரபாரதிமணியன்பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக  அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை.  இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும்  நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம்  சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய  தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி  தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை  வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

Continue Reading →

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு!

கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு (  பெண் எழுத்தாளர்களின் சிறந்த )…

Continue Reading →

இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா

இலக்கியத்தினூடே   பயணித்த   இயக்குநர்    பாலுமகேந்திரா‘பாலு… உன்னுடைய   நுண்ணுணர்வுகளுக்கும்   இந்த    மீடியத்தின்   மீது   நீ கொண்டிருக்கும்    காதலுக்கும்    உன்னுள்    இருக்கும் படைப்புத்தாகத்திற்கும்   நீ   ஒரு   இயக்குநராக    மாறுவதுதான்   இயல்பானது —  விரைவில்  நீ   ஒரு   படத்தை    இயக்குவாய்— Mark My Words    –  என்று    பல    வருடங்களுக்கு    முன்னர்    கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு –    தன்னைப்பார்க்கவந்த   பாலுமகேந்திராவை    வாழ்த்தியவர்   சர்வதேச   புகழ்  பெற்ற  இயக்குநர் சத்தியஜித் ரே. புனா   திரைப்படக்கல்லூரியில்   பாலுமகேந்திரா    ஒளிப்பதிவுக்கலையை பயின்ற    காலத்தில்    வருகைதரு   விருந்தினராக   விரிவுரையாற்ற   வந்த சத்தியஜித்ரேயை   பாலு மகேந்திரா   இலங்கையில்   மட்டக்களப்பில்  கல்வி    கற்றுக்கொண்டிருந்த    காலத்திலேயே   மிகவும்   நேசித்தவர். ரேயின்   ஆளுமையை    உள்வாங்கிக்கொண்ட   திரையுலக  கலைஞர்களின் வரிசையில்  பாலுமகேந்திரா  மிகவும்  முக்கியமானவர். ரே  மறைந்த  பின்னர்  1994   ஆம்   ஆண்டு  வெளியான  ஒரு  மேதையின் ஆளுமை   என்ற   தொகுப்பு  நூலில்  பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள்  திரைப்படத்துறையில்   பயிலவிருப்பவர்களுக்கு  சிறந்த  பாட நூல். இந்திய   சினிமாவின்  நூற்றாண்டு  தமிழகத்தில்   கொண்டாடப்பட்டுள்ள கால கட்டத்தில்  பாலுமகேந்திராவின்  மறைவை – தென்னிந்திய   சினிமாவில் அவரது   பங்களிப்பு  தொடர்பாக  ஆராய்வதற்கும் –  அவரது  இழப்பு பலருக்கும்  வழி  திறந்திருக்கிறது. பாலு மகேந்திரா  இயல்பிலேயே  நல்ல  தேர்ந்த  ரசனையாளர். இலக்கியப்பிரியர்.  தீவிர  வாசகர்.  இலங்கையில்  அவர்  மட்டக்களப்பில் படித்த  காலத்திலும்  சரி  கொழும்பில்  வரைபடக்கலைஞராக  பணியிலிருந்த காலத்திலும்  சரி  அவரது  கனவுத் தொழிற்சாலையாக  அவருக்குள்ளே தொழிற்பட்டது  அவர்  நேசித்த  சினிமாதான்.

Continue Reading →

லண்டனில் நுண்கலைகளுக்கான பட்டமளிப்பு

லண்டன் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழாவில் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம்லண்டன் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழாவில் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் மிருதங்கத்தில் டிப்ளோமா பரீட்சையை மேற்கொண்டு தேர்ச்சி பெற்று ‘சங்கீத கலாஜோதி’ பட்டத்தினை பெற்றுக்கொண்டார். இசை நடனம், மிருதங்கம், வயலின், வீணை போன்ற நுண்கலைகளுக்கு ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவம் மிக்க அமைப்பாக லண்டன் கீழைத்தேய பரீட்சைச்சபை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றது. ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் இந்த அமைப்பினை நிர்வகித்து வருகின்றார். கலையார்வம் கொண்ட அகஸ்ரி ஜோகரட்னம் தற்போது லண்டனில் வசித்து வரும் ‘மிருதங்க மேதை’ காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்ந்தும் மேலதிக பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.  ‘அண்மைக்காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசைஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும்’ என்று பிரபல மிருதங்கவாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்தசர்மா  அவர்கள் பாராட்டியிருந்தார்.
 

Continue Reading →

‘மூன்றாம் பிறை’ : ஜெயகாந்தன் என்ற ஆளுமையும் நானும்..

balumahendra– ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான அண்மையில் மறைந்த பாலுமகேந்திரா அவர்கள் ‘மூன்றாம் பிறை’ என்னும் பெயரில் வலைப்பதிவொன்றை பெப்ருவரி 2012இல் ஆரம்பித்து நடாத்தி வந்தார். அதிலவர் எழுதியிருந்த கட்டுரைகளை  ஒரு பதிவுக்காக ‘பதிவுகள்’ இணைய இதழ் பதிவு செய்கின்றது. – பதிவுகள் –

பாலுமகேந்திரா பேசுகிறேன்….
 
நண்பர்களே…,  என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும்    சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும்  சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி,  அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.

Continue Reading →

ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) நினைவாக…..

Dr. Rajini Thiranagamaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ராஜினி திரணகம ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடியவர். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திப் போராடியவர். வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கக் கூடியதொரு சூழலில் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த சொந்த மண்ணுக்குத் திரும்பியவர். போராட்டச் சூழலில் தமிழ் மக்கள்மேல் அனைத்துப் பிரிவினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல்கொடுத்தவர். அவற்றை ‘முறிந்த பனை’ என்னும் நூலில் பதிவு செய்தவர். அதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டவர். அவரைக்கொன்றவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் , குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், இவை யாவும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால் எம்மாலும் அவ்விதம் குற்றஞ்சாட்ட முடியவில்லை. இவரை யார் படுகொலை செய்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதுவொரு களங்கமாகத்தானிருக்கும். நிராயுதபாணியான பெண்ணொருவர், இரு குழந்தைகளின் தாய், சொந்த மண்ணில் மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருபோதுமே நியாயப் படுத்த முடியாது. இதுபோல் பலர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அல்லது காணாமல் போயிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும், அமைப்புகளும் இக்காலகட்டத்தில் தமது கடந்த கால வரலாற்றைப் பாரபட்சமின்றிச் சுயபரிசோதனை செய்வது அவசியம். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை மேலும் வலுப்படும். தவறுகளுக்காக,  தம்மைத்தாமே மீளாய்வு செய்வதென்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு. எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதொன்று.

Continue Reading →