“நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளி!” – பாரதி.-
கவிதை… கவிதை என்ற சொல்லைக் கேட்டது எப்போது? கவிதை என்ற சொல்லைப் பார்த்தது எப்போது? துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா? துல்லியமாகச்சொல்லிவிட முயற்சி செய்கிறேன். நடக்கும்போதும் யோசிக்கிறேன். படுத்துக்கொண்டும் யோசிக்கிறேன். அந்தத்துல்லியம் சற்று தூரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அம்மா பேசிய சொலவடைக்கிடையே மறைந்திருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன். இன்று என் மனைவி பேசுவதுபோல் அன்று பேசிய பலரின் சொற்சித்திரங்களைக் கையகப்படுத்த தவறிவிட்டேன். காரணம்…கவிதையை இனம்காணும் பருவத்தில் நான் இல்லை` அது, கவிதை உணர்வு என்னிடம் தோன்றாமலிருந்த காலம். கவிதை உணர்வு எனக்குள் தோன்றி என்னைத்தூங்கவிடாமல் உசுப்பத்தொடங்கியபொழுதிலிருந்துதான் கவிதையை இனம்காணும் தூண்டுதல் நிகழ்ந்தது.` அந்தத்தூண்டுதலுக்குப்பின்பே கவிதைபற்றிய உணர்வு, கவிதைபற்றிய எண்ணம், கவிதையோடு தொடர்பு வளர்ந்தது .தொடக்கப்பள்ளியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழிப் பாடல்கள்தாம் முதலில் அறிமுகம். அவற்றை ஒரு கடமையாகப் படித்தோம்; பாடினோம். அவற்றிலிருந்து நாம் பெற்றது சில அசைக்கமுடியாத உண்மைகள்; தெளிவுகள்;வழிகாட்டுதல்கள்; நீதிகள். செய்யுளாகப்படித்தோம். நீதிகளைத்தெரிந்துகொள்ள படித்தோம்.