-March 19, 2014, கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற ‘துரைவி’ அவர்களின் நினைவு தினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. ஊடகக்கல்லூரியில் (இலங்கை) சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் தேவகெளரி மகாலிங்கசிவம் அவர்களின் முகநூற் பதிவிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. நன்றி. –
இணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறது?நவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது?என்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும். குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது. ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.