கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம்.
ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும் பெண்கவிஞர் கவிதா,
“ஒரு சமூகத்தின்
சோகம் சுமந்த பாரத்தில்
கூனிமுடமாகி
உருக்குலைந்து
கண்களைக் குருடாக்கிய
கொலைக் களத்திலிருந்து
உயிர் தப்பிய கவிதை இது”
(முள்ளிவாய்க்காலுக்குப்பின், ப-37)
என்று குறிப்பிடுகின்றார். இப்பதிவு ஈழத்தமிழர்களின் கவிதைகளை ஒரு சமூகத்தின் வலிநிறைந்த வரலாற்று ஆவணமாக நம்மை நோக்கச் செய்கின்றது. இது போன்ற அழுத்தமும் அடர்த்தியும் நிறைந்த பதிவுகள் இன்னும் வேறுபட்ட நிலைகளில் வெவ்வேறு படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும்.