அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்!

அருண். விஜயராணி– ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான பெண் படைப்பாளிகளிலோருவர் அருண் விஜயராணி. அவர் இன்று மறைந்துள்ளதாக எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் முகநூலில் அறிவித்திருந்தார். அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதி  எழுதிய இந்தக்கட்டுரை வெளியாகின்றது. –

கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்

இலங்கை வானொலி ‘ விசாலாட்சிப்பாட்டி ‘ இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு

” வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது. அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை… வேற ஏதேன் கோளாறோ தெரியாது. இவ வரவே மாட்டா….. பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே…? அதனாலை ஒண்டு சொல்லுறன் கோவியாதையுங்கோ… பாட்டியின்ர பிரதியளை இரண்டு மூண்டா முன்னுக்கே அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி பிழைச்சுப்போகும். தடவித் தடவி வாசிக்கிற பாட்டிக்கு நீங்கள் இந்த உதவியை எண்டாலும் செய்து குடுங்கோ ”

இக்கடிதம் இலங்கை வானொலி கலையகத்திலிருந்து 08-11-1976 ஆம் திகதி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு. விவியன் நமசிவாயம் அவர்களிடமிருந்து ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதப்பட்டது. அந்தப்பெண்தான் விசாலாட்சிப்பாட்டி தொடரை எழுதியவர். அந்தப்பெண் அப்பொழுது பாட்டியல்ல. இளம் யுவதி. அவர்தான் அன்றைய விஜயராணி செல்வத்துரை, இன்றைய படைப்பாளி அருண். விஜயராணி. இவரது விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியது.

அக்காலத்தில் பல வானொலி நாடகங்கள் யாழ்ப்பாண பேச்சு உச்சரிப்பில் ஒலிபரப்பாகின. விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார்.

சமூகம் குறித்த அங்கதம் அதில் வெளிப்பட்டது. அங்கதம் சமூக சீர்திருத்தம் சார்ந்தது. அதனை அக்கால கட்டத்தின் நடைமுறை வாழ்வுடன் அவர் வானொலி நேயர்களுக்கு நயமுடன் வழங்கினார். வடக்கில் உரும்பராயைச் சேர்ந்த விஜயராணியின் முதலாவது சிறுகதை ‘ அவன் வரும்வரை ‘ இந்து மாணவன் என்ற ஒரு பாடசாலை மலரில் 1972 இல் வெளியானது.

Continue Reading →

நாவல்: அமெரிக்கா (4)!

அத்தியாயம் நான்கு: தடுப்புமுகாம் வாழ்வு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாமில் ஆண்கள் இருநூறு வரையிலிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆபிரிக்க, தென்னமெரிக்காவைச்சேர்ந்தவர்கள்.  நாடென்று பார்த்தால் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களே அதிகமானவர்களாகவிருந்தார்கள்.  இலங்கையைப்பொறுத்தவரையில் நாம் ஐவர்தாம். பங்களாதேஷ், இந்தியாவைச்சேர்ந்தவர்கள் இருவர் மட்டுமேயிருந்தார்கள். எல்சல்வடோர், கெளதமாலா போன்ற மத்திய அமெரிக்காவைச்சேர்ந்தவர்களுமிருந்தார்கள். 

விமான நிலையங்களில் போதிய கடவுச்சீட்டுகள், ஆவணங்களின்றி அகப்பட்டவர்கள், அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள், சட்ட விரோதமாக வேலை செய்து அகப்பட்டவர்கள், போதைவஸ்து முதலான குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாடு கடத்தப்படுவதற்காகக் காத்து நிற்பவர்கள்.. இவ்விதம் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு விதமான கைதிகள் அங்கிருந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்குரியது.

பெரும்பாலானவர்கள்  இரண்டு வருடங்களாக உள்ளே கிடக்கின்றார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் போதிய ஆவணங்களின்றி அகப்பட்டு அகதி அந்தஸ்து கோரியவர்கள்தாம்.  உறவுகள் பிரிக்கப்பட்ட நிலையில், உணர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்களின் நிலை வெளியில் பூச்சுப்பூசிக்கொண்டு, மினுங்கிக்கொண்டிருந்த உலகின் மாபெரும் வல்லரசொன்றின் இன்னுமொரு இருண்ட பக்கத்தை எனக்கு உணர்த்தி வைத்தது.  அமெரிக்கர்களைப்பொறுத்தவரையில் இவர்கள் புத்திசாலிகள்; கடின உழைப்பாளிகள்; விடா முயற்சி, அமோபலம் மிக்கவர்கள்; எத்தனையோவற்றில் உலகின் முன் மாதிரியாகத்திகழுபவர்கள், ஆனால் அதே அமெரிக்காவில்தான் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மனோ வியாதி பிடித்த ‘டெட் பண்டி’ போன்ற கொலையாளிகளும் இருக்கின்றார்கள். உரிமைகள் மறுதலிக்கப்பட்ட நிலையில் அகதிகளும் தடுப்பு முகாம்களென்ற பெயரில் திகழும் சிறைகளில் வாடுகின்றார்கள். வாய்க்கு வாய் நீதி, நியாயம், சமத்துவமென்று முழங்குமொரு நாட்டில் காணப்படும் மேற்படி நிலைமைகள் ஆய்வுக்குரியன.

Continue Reading →