ஒரு தகவல்

குவிகம் இலக்கிய வாசல் புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.  அடியேனின் நேர் பக்கம் என்ற கட்டுரைத்தொகுதிதான் அது.  டிசம்பர் 19, 2015 (சனிக்கிழமை) மாலை…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 136 : அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை ‘சலனங்கள்’; மாணவப் பருவத்தில்: ‘கண்மணி’யில் எனது சிறுவர் கதை ‘அரசாளும் தகுதி யாருக்கு?’; வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை பற்றி…. ; மயக்கமா? கலக்கமா?; யானை பார்த்த குருடர்கள்

அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை ‘சலனங்கள்’

சிரித்திரனில் வெளியான என் முதற் கதை.அச்சில் வெளியான எனது முதலாவது சிறுகதை ‘சலனங்கள்’. 1975 பங்குனி மாதச் ‘சிரித்திரன்’ இதழில் வெளியானது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். முள்ளியவளையைச்சேர்ந்த முல்லைத்திலகன் என்னும் மாணவர் அப்பொழுது யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவராகப்படித்துக்கொண்டிருந்தார். நடிப்புத்திறமை மிக்கவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீரபாண்டியக்கட்டப்பொம்மன், ராஜாராணி ( ‘சோக்கிரடிசு’) வசந்தமாளிகை திரைப்பட வசனங்களை அழகான , உச்சரிப்புடன் பேசிக்காட்டுவார். ‘ ஏதென்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே’ என்று ராஜாராணி சோக்கிரடிசு வசனங்களை, கட்டப்பொம்மன் வசனங்களை மீண்டும், மீண்டும் அவரைப்பேசச்சொல்லிக் கேட்டு இரசிப்பதுண்டு. அவற்றை மாணவர்களாகிய நாம் இரசிப்பதுண்டு.

ஒருமுறை அவரது ஊரான முள்ளியவளைக்கும் சென்று ஒரு வாரமளவில் அவர் வீட்டில் தங்கியிருந்து திரும்பியிருக்கின்றேன். அப்பொழுது ஆழநடுக்காட்டினுள் ‘கள்ளூறல்’ என்னும் எப்பொழுதும் வற்றாத நீர்நிலையினைத்தேடி அலைந்து, திரிந்ததை இப்பொழுதும் மறக்க முடியாது. எனது வன்னி மண் நாவலில் அந்த ஆழ்நடுக்காட்டின் அனுபவங்களைச்சிறிது கற்பனையையும் கலந்து பதிவு செய்திருக்கின்றேன். அவரது கையெழுத்தும் அழகானது. அவரைக்கொண்டு எனது முதற்சிறுகதையான ‘சலனங்கள்’ சிறுகதையினைப் பிரதியெடுத்து, ‘சிரித்திரன்’ சஞ்சிகை நடாத்திய ‘அறிஞர் அ.ந.கந்தசாமி’ சிறுகதைப்போட்டிக்கு அனுப்பியிருந்தேன். அது பாராட்டுக்குரிய சிறுகதைகளிலொன்றாகத்தெரிவு செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. அச்சிறுகதை வெளியான சிரித்திரன் பக்கத்தின் ஒரு பகுதியினையே இங்கே காணுகின்றீர்கள். இது அச்சில் வெளியான முதற் சிறுகதையான போதிலும், கதைகள், நாவல்களென்று பாடசாலை அப்பியாசக் ‘கொப்பி’களில் எனது பத்தாம் வயதிலிருந்து நிறையவே எழுதி, எழுதிக் குவித்திருக்கின்றேன். இந்தச்சிறுகதை மூலமே எனக்குச் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்துடனான அறிமுகமும், நட்பும் ஆரம்பமானது. அப்பொழுது அவர் யாழ் ஐயனார் கோயிலருக்கில் வசித்து வந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் இடம் மாறி வந்திருந்தார். பின்னர் எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் யாழ் கே.கே.எஸ்.வீதியில் வீடு கட்டிக் குடிபுகுந்திருந்தார். அவரது அந்த வீட்டினை வடிவமைத்திருந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குணசிங்கம் ஆவார். நான் அக்காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்றிருந்தபொழுது அவரை அவ்வீட்டில் சென்று சந்தித்தேன். அப்பொழுதுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டினை எனக்குச் சுற்றிக்காட்டினார். அப்பொழுதுதான் அதனை வடிவமைத்தவர் குணசிங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதுவே நான் அவரை இறுதியாகச் சந்தித்தது.

Continue Reading →