நாவல்: அமெரிக்கா (5)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் –


அத்தியாயம் ஐந்து: முகாமின் பொழுதுபோக்கு அனுபவங்கள் சில….

ஆரம்பத்தில் முதலிரண்டு கிழமைகளிலும் எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஜன்னலினூடு தொலைவில்  விமானங்கள் சுதந்திரமாக கோடு கிழிப்பதைப்பார்க்கும்போது  , தொலைவில் வறிய கறுப்பினத்துக் குழந்தைகள் விளையாடுவதைப்பார்க்கும்போது  சுதந்திரமற்ற எங்களது நிலை நெஞ்சினை வருத்தியது.  விசர் பிடித்தவர்களைப்போல்  நாம் ஐவரும் எங்கள் எங்களது படுக்கைகளில் புரண்டு கிடந்தோம்.

ஊர் நினைவுகள் நெஞ்சில் பரவும்.  வீட்டு நினைவுகள் , கெளசல்யாவின் நினைவுகள்  சிறகடிக்கும்.  கலவர நினைவுகளின் கொடூரம் கண்களில் வந்து நிற்கும்.  எத்தனையோ கனவுகள்,  எத்தனையோ திட்டங்கள், பொறுப்புகள் இருந்தன.  வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பகுதிக்குள் வந்து இப்படி மாட்டுப்படுவோமென்று யார் கண்டது. இவர்களால் ஏன் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்லை. எல்சல்வடோர் , ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் வாழ்க்கை எவ்விதம் வீணாக்கிக்கொண்டிருக்கின்றது. குற்றச்செயல் புரிந்தவர்களையும், கொடுமை காரணமாக நாடு விட்டு நாடு ஓடி வந்தவர்களையும் ஒன்றாக வைத்திருக்கின்றார்கள். கைதிகளைப்போல் சட்டதிட்டங்கள். காவலர்களின் அதட்டல்கள், உறுக்கல்கள், தத்தமது நாடுகளில் நிகழும் , நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து , உற்றார் , உறவினரைப்பிரிந்து , நொந்த , மனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்கு…..   எம்மைப்பொறுத்தவரையில் நாம் இன்னும் கலவரத்தின் கொடூரத்திலிருந்து மீண்டிருக்கவில்லை.  அதற்குள் எங்களுக்கு இங்கு ஏற்பட்டுவிட்ட நிகழ்வுகள் மேலும் எம்மை வருத்தின.

Continue Reading →