சொந்தமென்றும், உறவென்றும், இலக்கியமென்றும், கலையுலகென்றும் மறைந்துகொண்டிருப்போரின் நினைவுகள் மனதைப் பம்பரமாக்கி, காலம் என்ற ககன வெளியில் சிதைத்தெறியும் துயரில் நான். நிம்மதி தேடி அலைகிறது மனம். நிற்பதுவும் நடப்பதுவும் வெறும் தோற்ற மயக்கங்களோ என்று சிந்தனை சிலிர்க்கிறது. வீட்டில் நடந்துபோன துயர் அனுபவங்களும் மேலும் துயர் சோபையைக் கூட்டுகிறது. ஏன் சிந்தனை அலையைக் குறிக்கிட்டு தொலைபேசி அழைப்பு அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நிதர்சன உலகில் நான். இன்னுமொரு தொலைபேசி அழைப்பு. ஒரே கதையைத் திரும்பத் திரும்ப சொல்லப்போகும் அழைப்பு மணி அது. இன்னுமொரு திகிலில் கதையைக் கொண்டு சேர்க்கப் போகிறதா அந்த அழைப்பு மணி. அழைக்காத விருந்தாளியாக ஒலிக்கிறது அந்த அழைப்பு மணி. அழைப்பிற்கு பதில் சொல்லாமல் விடலாமோ என்று நினைத்தேன். அது நாகரீகமில்லை என்று மனதில் பட்டது.
‘ஹலோ’ என்றேன்
‘நான் சந்திரமதி கதைக்கிறேன்’
ஓ சந்ரமதியா? நெடுநாளாhகிவிட்டது. என்ன விடயம்?
‘எனக்கொரு உதவி செய்ய வேணும் மாதங்கி. உங்களுக்கு லண்டனில் இருக்கிற நல்ல சமூகசேவையாளர்கள் என்று பலரையும் தெரியும்தானே! ஆங்கிலம் நல்லாகக் கதைக்கக்கூடிய ஒரு பொம்பிளை ஒருவரை அறிமுகஞ் செய்து தருவீங்களோ?’
‘ஏன் உங்களுக்கு கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் தானே! உதவி செய்ய மாட்டார்களோ?’
‘எல்லோரும் இருக்கிறார்கள்தான். ஆனால்.’
மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிய விசும்பல் அவளது பதிலில் ஒலித்தது.