நவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிற்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மண்ணின் மைய அரசியலையும் சமூக பொருளாதார பின்னணிகளையும் களமாககொண்டு ஒரு புதிய படைப்பாக சேனன் அவர்கள் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலானது புலம் பெயர் இலக்கிய மரபை இன்னொரு தளத்திற்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் அதற்கு இன்னொரு பரிமாணத்தை வழங்கியுள்ளதாகவும் இலக்கிய விமர்சகர்களினாலும் ஆய்வாளர்களினாலும் மிக அண்மைக்காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.
சேனன் புகலிட அரசியல் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவர், இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத் தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக்கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர், ஊடகவியலாளர், விமர்சகர், கொஞ்சம் உன்மத்தம் பிடித்தவர்( உபயம்- யமுனா ராஜேந்திரன்) என பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர். ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்களிலும் வியக்கத்தகு ஆற்றல் பெற்ற இவர் இப்போது முதன் முறையாக ஒரு நாவல் மூலம் படைப்பிலக்கிய வாதியாக எமக்கு அறிமுகமாகின்றார். ஆனால் இவர் பல சகாப்தங்களுக்கு முன்பே பல இலக்கியப் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்பதும் அன்று ஷோபா சக்தியின் நண்பராக விளங்கிய இவரே ஷோபா சக்திக்கு உலக இலக்கியங்கள் மீதான பரிச்சயங்க்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும் நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மை. ஒரு அகதியின் வாக்குமூலமாக ஆரம்பமாகும் ‘கொரில்லா’ நாவலின் அந்த ஆரம்ப அத்தியாயமும் வடிவமும் தனது உலக இலக்கியங்களின் மீதான பரிச்சயம் உள்ள இவரது எண்ணத்தில் உதித்த எண்ணக்கரு என்பதும், இப்படி பல வகைகளிலும் ஷோபாசக்திக்கு உறுதுணையாக இருந்த இவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்று ஷோபாசக்தியின் அரசியலை முன்வைத்து ஒரு புத்தகமே வெளியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் வேறு ஒரு சம்பவம்.
நம் மீது பிரயோகிக்கப்படும் ஒழுங்கு முறைமைகளும் நியதிகளும் நக்கெதிரானவை என்று நாம் அறியும் பட்சத்தில் அவற்றை எவ்வழியிலாவது உடைத்தெறிய முயல்வது மனித இயல்பு.அத்தகைய உடைத்தெறியும் முயற்சியின் விளைவாக ஒரு ஒழுங்கு முறைமையற்ற செயற்பாடாக உருப்பெற்ற லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரத்தினை மையமாக வைத்து இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய டப்லினியர் என்ற சிறுகதைத் தொகுப்பே இந்நாவலிற்கான தனது ஆகர்ஷணம் என்று குறிப்பிடுகிறார் சேனன்.
பிரித்தானிய ஆட்சி முறைமையினையும் சட்ட முறைமைஇணையும் கேள்விக்குள்ளாக்கிய லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரமானது மார்க் டகன் என்ற கறுப்பின இளைஞனை பிரிட்டிஷ் பொலிசார் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஆரம்பமாகின்றது. கோபமூட்டப்பட்ட சிறுபான்மை இன இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் ஒரு வார காலம் நீடித்த இக்கலவரத்தில் சிறிய வியாபார நிலையங்களில்லிருந்து பல்பொருள் அங்காடிகள் பொது ஸ்தாபனங்கள் அரச நிறுவங்கள் என அனைத்துமே சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. இக்கலவரங்களும் வன்முறைகளும் அன்று BMM புரட்சி அல்லது கலகம் என்று சமூகவலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. காரணம் – மிகத் தெளிவாகவும் திட்டமிடப்பட்டும் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காமல் மேற்கொண்டு இத்தாக்குதலானது எப்படி சாத்தியமானது என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி, பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரையும் திகைப்பில் ஆழ்த்திய போது. இதன் பின்னால் BMM எனப்படும் பிளாக்பெரி மேசன்ஜ்சர் சேவை இருந்தது அறிந்து கொள்ளப்பட்டது.