மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் –
அத்தியாயம் ஆறு: தமிழகத்துப் பாதிரியார் ஏபிராகாமின் வருகை!
ஒவ்வொரு நாளையும் ஒரு புது நாளாகக்கருதி , எங்கள் தடுப்புமுகாம் வாழ்வை மறக்க எண்ணி, ஏனையவற்றில் கவனம் செலுத்த முயன்றுகொண்டிருந்தபோதும் முற்றாக எங்களால் அவ்விதம் செய்ய முடியவில்லை. எத்தனை நேரமென்றுதான் தொலைக்காட்சி பார்ப்பது? ‘டேபிள் டென்னிஷ்’ விளையாடுவது? தேகப்பயிற்சி செய்வது? சுதந்திரமற்ற தடுப்பு முகாம் வாழ்வின் கனம் இடைக்கிடை எம்மை மேலும் மேலும் அமுக்கத்தொடங்கிவிடும். இத்தகைய சமயங்களில் படுக்கைகளில் வந்து புரண்டு கிடப்போம். இதே சமயம் வெளியில் இல்லாததைவிட அதிக அளவில் உள்ளே எங்களுக்கு ஒரு வசதி இருக்கத்தான் செய்தது. உலகின் எந்த மூலை முடுக்கில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ள எங்களால் முடிந்தது. சட்டவிரோதமாகத்தான். பெரிய பெரிய நிறுவனங்கள் பலவற்றின் தொலைபேசிக்குரிய கடனட்டை இலக்கங்கள் ஏதோ ஒரு வழியில் முகாமில் உள்ளவர்களுக்குக் கிடைத்தவண்ணமிருந்தன. எப்படிக்கிடைத்ததோ அவர்களுக்கே வெளிச்சம். யாரோ ஒரு மேற்கு இந்தியன் ஒருவனின் பெண் நண்பர் தொலைபேசி நிறுவனமொன்றில் ‘ஒபரேட்டரா’க வேலை செய்வதாகவும், அவள் மூலம் அவன் பெற்றுக்கொள்வதாகவும் கதை அடிபட்டது. அத்தொலைபேசி இலக்கங்களை அவன் அங்குள்ளவர்களுக்கு குறைந்த அளவு பணத்துக்கு விற்றுக்கொண்டிருந்தான். சிலருக்கு இலவசமாகவும் கொடுத்தான். இவ்விதம் கிடைக்கும் இலக்கங்களைக்கொண்டு உலகின் மூலை , முடுக்குகளையெல்லாம் தொடர்புகொள்ள முடிந்ததால், தடுப்பு முகாம் வாசிகள் தம் நாடுகளிலுள்ள தம் உறவினர்கள், நண்பர்களுடன் நாள் முழுவதும் உரையாடிக்கொண்டிருப்பார்கள். இவ்விதமாக யாழ்ப்பாணத்திலுள்ளவர்களுடன் கூடத்தொலைபேசி மூலம் கதைக்கக்கூடியதாகவிருந்தது. ரவிச்சந்திரனின் வீட்டில் தொலைபேசி வசதி இருந்தது. ஓரிரு சமயங்களில் காலை ஏழு மணிக்குப் பொங்கும் பூம்புனலைத்தொலைபேசியினூடு கேட்டுக்கூட மகிழ்ந்ததுண்டு. இச்செயலில் சட்டவிரோதத்தன்மை எம் தடுப்பு முகாம் வாழ்வின் உளவியல் வேதனையின் முன்னால் உருண்டோடிவிட்டது.