நாவல்: அமெரிக்கா! (8)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிக்கம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியததானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் இன்றைய தலைமுறையினரும் , அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். இறுதி அத்தியாயம் மீளத்திருத்தி, எழுதப்பட்டுள்ளது.  – வ.ந.கி. –


அத்தியாயம் எட்டு: விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது.  நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை.  ‘ஃபாதர்’ ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: “ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க.” ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும்போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது.  ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலில் யதார்த்தம்  தெரிந்து விட்டதென்பது.  இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய  ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது.  அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை.  நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.

Continue Reading →