ஊடகங்களுக்கு மனசாட்சி உண்டா? இருக்க வேண்டுமா? – கீற்று இணையக் கட்டுரையை முன் வைத்து – சத்யானந்தன்
இந்தக் கேள்வி முதலில் எழுப்பப் படலாமா என்ற சர்ச்சைக்கே இடமுண்டு. ஊடக சுதந்திரம் என்ன விலை கொடுத்தாலும் நிலை நாட்டப்பட்டுப் பேணப் பட வேண்டியதே. ஊடகங்களே ஒரு சமுதாயத்தின் ஒற்றைச் சாளரம் என்றே சொல்லி விடலாம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஊடகத்தில் வெளிவருபவையின் உள்நோக்கம், அரசியல், வணிக நோக்கம் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டால் சமூகத்தின் முன் எந்த விஷயமுமே வெளிச்சமுமாகாமல் விவாதிக்கவும் படாமல் பெரிய அநீதிகள், சுரண்டல்கள், மீறல்கள் எதுவுமே வெளிவராமற் போகும். தம் உரிமைகள் என்ன என்று மக்களுக்கு நினைவூட்டும் அதைப் பறிக்கும் செயல்களை வெளிச்சமிடும் அரும்பணிக்கு இடமே இன்றிப் போகும். சமுதாய மாற்றத்துக்கு நம்பிக்கை தரும் ஒரே பாதை அடைபட்டுப் போகும்.
அதே சமயம் இந்திய அரசின் ஊடகச் சட்டங்களை வாசித்தவர்கள் அறிவார்கள் சாராம்சமாக சட்டங்கள் சொல்வது சுயகட்டுப்பாடு ஒன்றையே. ஒழுங்குமுறையாளர் கேட்பது ஒரு விளக்கமே. கடும் சட்டங்கள் 1977க்கு முன் இருந்தன. இது ஒரு பெரிய சரடு. பின்னர் காண்போம்.
எனவே ஊடகங்கள் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ சுயகட்டுப்பாடு ஒன்றைக் கண்டிப்பாகக் கொள்ளத் தான் வேண்டும். ஊடகங்களில் வரும் பரபரப்பான பலவற்றை நான் வாசிப்பதே இல்லை. குற்றங்களுக்கும் வம்புகளுக்கும் வதந்திகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம் பல சமயங்களில் தரக்குறைவானவை. எனவே இளையராஜாவுடன் ஊடக நிருபர் ஒருவருக்கு என்ன மோதல் என்றெல்லாம் நான் ஆழ்ந்து போகவே இல்லை. தற்செயலாக இன்று (23.12.2015) தமிழ் ஹிந்து நாளிதழில் ‘வெள்ளச் சேதம் பற்றிய விவாதம் திசை மாற பீப் பாடல் குறித்த சர்ச்சையே காரணமா என்று ஒரு கணிப்புக்கான கேள்வியைப் பார்த்தேன். அது என்னை உலுக்கிப் போட்டது.